Enable Javscript for better performance
ரோஹித் காயம்: முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்- Dinamani

சுடச்சுட

    
    rohit

    இந்திய அணியின் ரோஹித் ஷர்மா தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருவதால், முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பெர்த் நகரில் பிப்ரவரி 1ம் திதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்று விட்டது.

    புள்ளிகள் பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ள இங்கிலாந்து, இந்திய அணிகள் மோதும் அடுத்த ஆட்டம், வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. அறிவிக்கப்படாத அரையிறுதி ஆட்டமான இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியும்.

    இதற்கிடையே, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 138 ரன்கள் எடுத்தபோது தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால், அடுத்த ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. காயம் இன்னும் குணமடையாததால், இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் அவருக்கு ஓய்வு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

    "இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாலும் கூட, ரோஹித் ஷர்மா அடுத்த ஆட்டங்களில் பங்கேற்பது சிரமமே. அவர் குணமடைந்து வருகிறார். இருப்பினும், உலகக் கோப்பை தொடங்க இன்னும் மூன்று வாரங்களே இருப்பதால், எவ்வித பரீச்சார்த்த முயற்சியையும் எடுக்க விரும்பவில்லை' என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ரோஹித் ஷர்மாவின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த அணியின் மருத்துவர், அவரை ஒரு வாரத்துக்கு பூரண ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னரே பயிற்சியைத் தொடங்க முடியும். எனவே, உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு முத்தரப்பு தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு கூடுதல் சுமையை அளிக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை.

    அநேகமாக, பிப்ரவரி 8, 10ம் தேதிகளில் முறையே ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களின்போது ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதி குறித்து சோதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    வாட்சன் விலகல்: ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சனும் தசைப்பிடிப்பால் அவதிப்படுகிறார். காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்றாலும், உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai