சுடச்சுட

    

    கடைசி நேரத்தில் சௌரஸ் அபாரம்: பார்சிலோனா வெற்றி

    By  மாட்ரிட்,  |   Published on : 01st October 2015 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    21

    லீவர்குசென் அணிக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் லூயிஸ் சௌரஸ் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியதால் 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.
     ஸ்பெயினின் பார்சிலோனாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுஇஎஃப்ஏ) கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா - பேயர் லீவர்குசென் அணிகள் மோதின.
     லாஸ் பால்மாஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் காயமடைந்ததால் மெஸ்ஸி, 8 வாரங்கள் போட்டியில் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் தாக்கம் பார்சிலோனா அணியில் தெளிவாக தெரிந்தது.
     தடுமாற்றம்: தொடக்கத்தில் அந்த அணி மிகுந்த தடுமாற்றத்தைச் சந்தித்தது. 10 ஆவது நிமிடத்தில் கோல் வலையை நோக்கி சாண்ட்ரே (மெஸ்ஸிக்கு பதிலாக களமிறக்கப்பட்டவர்) இடது காலில் உதைத்த பந்தை, லீவர்குசென் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.
     ஆரம்பத்திலேயே ஏமாற்றமடைந்த பார்சிலோனா, 22ஆவது நிமிடத்தில் கைரிகோஸ் பாபடோபுலாஸ் அடித்த கோல் முயற்சிக்கு இடமளித்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் பேயர் லீவர்குசென் முன்னிலைப் பெற்றது.
     இரண்டாவது பாதியில் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்ட பார்சிலோனாவுக்கு 80-ஆவது நிமிடத்தில் செர்ஜி ராபர்டோ முதல் கோலை பெற்றுத் தந்து ஆறுதல் அளித்தார். மெஸ்ஸி இல்லாததால் நெய்மர் மீது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். ஆனால், அவர் கடைசி வரை அணிக்காக ஒரு கோல் கூட அடித்துத் தரவில்லை. ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றதால் பரபரப்பு கூடியது.
     சௌரஸ் அபாரம்: இந்த சூழலில் 82-ஆவது நிமிடத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் லூயிஸ் சௌரஸ் சிறப்பாக செயல்பட்டு கோல் அடித்தார். இதனால், 2-1 என்ற கணக்கில் பார்சிலோனா முன்னிலைப் பெற்றது. கடைசி நேரத்தில் பார்சிலோனா வீரர்கள் தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர். முடிவில் 2-1 என்ற கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின்னர் சௌரஸ் கூறுகையில், "கடைசி வரை நாங்கள் நம்பிக்கையுடன் விளையாடினோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் வெற்றியை எங்கள் வசமாக்கியுள்ளோம்' என்றார்.
     இதன் மூலம் 2 போட்டிகளில் விளையாடியுள்ள பார்சிலோனா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று "இ' பிரிவில் முதலிடம் வகிக்கிறது. ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் லீவர்குசென் அணி (3 புள்ளிகள்) 2-ஆவது இடத்திலுள்ளது.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai