Enable Javscript for better performance
முதல் டி-20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்: 3 மாதத்துக்கு பின் களமிறங்குகிறார் தோனி - Dinamani

சுடச்சுட

  

  முதல் டி-20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்: 3 மாதத்துக்கு பின் களமிறங்குகிறார் தோனி

  Published on : 02nd October 2015 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  16

  இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
   இந்தியாவுடன் மூன்று டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி நீண்ட நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளது.
   இவ்விரு அணிகளிடையிலான முதல் டி-20 போட்டி ஹிமாசல பிரதேசத்திலுள்ள தர்மசாலா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தில்லி பாலம் விமானப்படை மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய "ஏ' அணிக்கு எதிரான பயிற்சி டி-20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இருப்பினும் அந்த அணியின் சுயரூபம் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில்தான் தெரிய வரும்.
   அணிக்குத் திரும்பும் தோனி: ஆனால், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய "ஏ' அணி 190 ரன்களை சேஸிங் செய்தது, இந்திய அணியினருக்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. தர்மசாலாவில் நிலவும் சீதோஷ்ண நிலை இந்திய வீரர்களைக் காட்டிலும், தென் ஆப்பிரிக்க அணியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
   டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி-20 போட்டிக்கு தயாராகும் விதமாக இரு அணிகளும் இந்தத் தொடரை எதிர்கொண்டுள்ளன.
   அதேநேரத்தில் ஸ்ரீநாத் அரவிந்த் போன்ற புதிய வீரர்களும் இந்திய அணியில் வாய்ப்பைப் பெற்றிருப்பதால் அவர்களுக்கு இந்தப் போட்டி பரிசோதனைக் களமாகும். இந்த டி-20 தொடர் தவிர, உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இலங்கைக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரிலும், ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
   பேட்ஸ்மேன்களின் யுத்தம்: இந்தத் தொடர், இரு அணிகளின் பேட்ஸ்மேன்களிடையேயான யுத்தமாக இருக்கும். ஃபாப் டுபிளெஸ்ஸிஸ், சூறாவளி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் போன்ற அச்சுறுத்தும் வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணியில் உள்ளனர்.
   இவர்கள் தவிர, அபாயகரமான பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், ஹஷிம் ஆம்லா, ஜே.பி.டுமினி ஆகியோரும் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
   பந்துவீச்சில், கைல் அபோட், கிறிஸ் மோரீஸ், சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் மற்றும் அல்பி மோர்கெல் ஆகியோர் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளிக்க காத்திருக்கின்றனர்.
   டுபிளெஸ்ஸிஸ், ஐபிஎல் போட்டியில் "கேப்டன் கூல்' தோனியின் கீழ் விளையாடிய அனுபவமுடையவர். அதனால் தோனியின் வியூகங்களை அவர் நன்றாக அறிந்து வைத்திருப்பார்.
   அதேபோல மைக் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா) தென் ஆப்பிரிக்காவின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவரும் இந்தியாவுடன் நிறைய அனுபவங்களை சந்தித்தவராவார். இது, தென் ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் சாதகமாகும்.
   இந்திய அணியைப் பொருத்த வரை, அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண், அண்மையில் முடிந்த வங்கதேச "ஏ' அணிக்கு எதிரான போட்டியில் 150 ரன்களை விளாசி நல்ல ஃபார்மில் உள்ளார்.
   தொடக்க வீரர்கள் யார்?: தவணுடன் மற்றொரு தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்பதில் ரோஹித் சர்மா மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோர் நடுவரிசையில் களமிறங்குவர்.
   இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆகிய 2 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் அஸ்வின், இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி தொடர் நாயகன் விருதை பெற்றார். இதனால் ஹர்பஜன் சிங்குக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இவர்களுக்கு மாற்று வீரராக அமித் மிஸ்ராவும், அக்ஷர் படேலும் உள்ளனர். தர்மசாலா மைதானம் "ஸ்விங்' பந்துவீச்சுக்கு நன்றாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
   போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் விவரம் வருமாறு:
   இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஸ்ரீநாத் அரவிந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவண், ஹர்பஜன் சிங், விராட் கோலி, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல், அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா.
   தென் ஆப்பிரிக்கா: ஃபாப் டுபிளெஸ்ஸிஸ் (கேப்டன்), கைல் அபோட், ஹஷிம் ஆம்லா, ஃபர்ஹான் பெஹர்டியன், குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மர்சன்ட் டி லங்கி, ஏபி டி வில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர், எட்டி லீ, டேவிட் மில்லர், அல்பி மோர்கெல், கிறிஸ் மோரீஸ், ககிசோ ரபடா, கயா ஜோண்டோ.
  நேரம்: இரவு 7 மணி
   "வார்த்தை அல்லது உடல் ரீதியாக மோதுவது என்பது ஆக்ரோஷத்துக்கான அர்த்தமாகாது. ஆக்ரோஷமாக விளையாடுவது நல்லது. அதேநேரத்தில், விதிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு வீரர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை வராத வண்ணம் இருக்க வேண்டும். நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஆக்ரோஷத்துடன் நாங்கள் விளையாட விரும்புகிறோம்'
   -மகேந்திர சிங் தோனி,
   இந்திய கேப்டன்.
   "இந்தத் தொடரில் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இங்கு (இந்தியா) தான் அடுத்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. அதற்கு தயாராகும் விதமாக சிறப்பாக விளையாடுவோம். உலகக் கோப்பை போட்டிக்கும் தற்போதைய போட்டிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை'
   -ஃபாப் டுபிளெஸ்ஸிஸ், தென் ஆப்ரிக்க கேப்டன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai