Enable Javscript for better performance
டுமினி, பெஹர்டியன் அதிரடி: முதல் டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி- Dinamani

சுடச்சுட

  

  டுமினி, பெஹர்டியன் அதிரடி: முதல் டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

  By தர்மசாலா,  |   Published on : 03rd October 2015 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  12

  இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஜே.பி.டுமினி, ஃபர்ஹான் பெஹர்டியன் ஆகியோரின் அதிரடியில் தென் ஆப்பிரிக்க அணி 200 ரன்களை எட்டிப்பிடித்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
   இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது.
   இதில், முதலாவது டி-20 போட்டி, ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
   இந்திய அணியில், ரஹானே, ஹர்பஜன் சிங் ஆகியோர் களமிறங்கும் அணியில் இடம்பெறவில்லை.
   ரோஹித் சதம்: ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் இந்திய அணியின் பேட்டிங்கை தொடங்கினர். 3 ஓவர்களுக்குள் 4 பவுண்டரி விரட்டி ரோஹித் அதிரடியை ஆரம்பித்தார்.
   ஆனால், 5-ஆவது ஓவரில் ஷிகர் தவண் (3 ரன்கள்) ரன் அவுட்டானார். இதன் பின்னர் வந்த கோலி, ரோஹித்துடன் கைகோத்தார். இருவரும் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டதோடு அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் விரட்டினர்.
   இதனால், இந்திய அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. 10-ஆவது ஓவரில் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார் ரோஹித்.
   முதல் 50 ரன்களை அடிக்க 40 பந்துகளை எடுத்துக் கொண்ட ரோஹித், அடுத்த 50 ரன்களை 22 பந்துகளில் விளாசினார். டி லங்கியின் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்டு தனது முதலாவது டி-20 சதத்தைப் பதிவு செய்தார் ரோஹித்.
   இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்துப் பிரிந்தது. விராட் கோலி, 43 ரன்கள் (27 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் டுமினியிடம் கேட்ச் கொடுத்தார்.
   இந்தியா 199 ரன்கள்: அதிரடியாக சதம் விளாசிய ரோஹித் (106 ரன்கள், 66 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்ஸர்) அடித்த பந்து, கிறிஸ் மோரீஸ் கையில் தஞ்சம் புகுந்தது.
   அடுத்து சுரேஷ் ரெய்னாவும், தோனியும் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இந்த கூட்டணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரெய்னா தனது பங்குக்கு 14 ரன்கள் (8 பந்து, 2 சிக்ஸர்) சேர்த்து எல்பிடபிள்யூ ஆனார்.
   தொடர்ந்து களமிறங்கிய அம்பாதி ராயுடு (0) வந்த வேகத்தில் ரன்-அவுட்டாகி நடையைக் கட்டினார். கடைசி நேரத்தில் அக்ஷர் படேல் தோனிக்கு ஒத்துழைத்தார். கைல் அபோட்டின் கடைசிப் பந்தில் தனக்கே உரித்தான பாணியில் தோனி சிக்ஸர் அடித்து இன்னிங்ûஸ நிறைவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. தோனி, 20 ரன்களும் (12 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்), படேல் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
   டிவில்லியர்ஸ் - ஆம்லா அதிரடி: இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஆம்லாவும், டி வில்லியர்ஸýம் மின்னல் வேகத்தில் ரன் குவித்தனர். இந்த ஜோடியைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். இதனால் 5 ஓவர்களிலேயே அந்த அணி 60 ரன்கள் குவித்தது.
   8-ஆவது ஓவரில் ஆம்லா (36 ரன்கள், 24 பந்து, 5 பவுண்டரி) ரன்அவுட்டனார். மறுமுனையில் அச்சுறுத்திக் கொண்டிருந்த டிவில்லியர்ஸ் அரை சதம் அடித்த திருப்தியோடு அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார். அவர், 32 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் குவித்தார்.
   டுமினி மிரட்டல்: இதன் பின்னர் வந்த டுபிளெஸ்ஸிஸýம் (4 ரன்கள்) நிலைக்கவில்லை. இதனால், இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தழைத்தது. ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த ஜேபி டுமினியும், பெஹர்டியனும் சூழ்நிலையை தலைகீழாக மாற்றினர்.
   குறிப்பாக டுமினி ரன் மழை பொழிந்தார். பெஹர்டியனும் நிலைமைக்கு தகுந்தவாறு ஆடினார். 54 பந்துகளில் 101 ரன்கள் தேவை என்ற நெருக்கடியில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி, டுமினி - பெஹர்டியன் அதிரடியில் 2 பந்துகளை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது.
   19.4 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. டுமினி 68 ரன்களுடனும் (34 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்), பெஹர்டியன் 32 ரன்களுடனும் (23 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக டுமினி தேர்வானார். 2-ஆவது டி-20 போட்டி கட்டாக்கில் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.
   19.jpg

  21.jpg 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai