Enable Javscript for better performance
முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து- Dinamani

சுடச்சுட

  

  முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து

  By சென்னை,  |   Published on : 03rd October 2015 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர், சென்னையில் சனிக்கிழமை தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னையின் எஃப்சி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
   எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை தொடங்குகிறது.
   இரவு 7 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் உள்ளூர் அணியான சென்னையின் எஃப்சியும், நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன. வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை மொத்தம் 61 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. சென்னையின் எஃப்சி அணியைப் பொருத்த வரை, கடந்த ஆண்டில் காணப்பட்ட குறைகளை குறிப்பாக நடுக்களம், தடுப்பாட்டம் ஆகியவற்றில் இந்த முறை மாற்றங்களை செய்துள்ளது. பிரேசில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து சில வலுவான வீரர்களை இறக்குமதி செய்துள்ளது. நட்சத்திர வீரர் புளூமர்: அதேநேரத்தில் கடந்த முறை சிறப்பாக விளையாடிய வீரர்களை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் தொடரில் 9 கோல்கள் அடித்து தங்க "ஷூ' வென்ற நட்சத்திர நடுக்கள வீரர் இலானோ புளூமர் (பிரேசில்), இந்த முறையும் சென்னையின் எஃப்சிக்காக சாகச ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார்.
   மைக்கேல் சில்வெஸ்ட்ரி, எரிக் ஜெம்பா ஆகியோருக்குப் பதிலாக இத்தாலியின் நடுக்கள வீரர்கள் மேனுலி பிளாசி, தடுப்பாட்டக்காரர் அலெஸாண்ட்ரோ போடென்ஸா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, பிரேசில் நடுக்கள வீரர் ரஃபேல் அகஸ்டோ, தடுப்பாட்டக்காரர்கள் ஈடர் மாண்ட்டெய்ரோ, மெய்ல்சன் ஆல்வ்ஸ் ஆகியோர் சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில், எத்தியோப்பிய முன்கள வீரர் ஃபிக்ரு, கேமரூன் கோல் கீப்பர் அபௌலா எடிமா ஆகியோர் கொல்த்தா அணியிலிருந்து சென்னை அணிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆட்டத்தின் போக்கை திடீரென மாற்றியமைக்கும் வல்லமைமிக்க இந்த இருவரும் சென்னையின் எஃப்சிக்கு தொடக்க ஆட்டத்தில் வெற்றியை பரிசளிக்கும் முனைப்பில் உள்ளனர். தாக்குதல் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஆட்ட உத்தியை வகுத்துள்ளார் சென்னையின் எஃப்சி பயிற்சியாளரும் வீரருமான மார்கோ மெட்ராஸி.
   ரசிகர்கள் எதிர்பார்ப்பு: கொல்கத்தா அணியைப் பொருத்த வரை, ஜப்பானில் பிறந்த இந்திய வம்சாவளி நடுக்கள வீரர் அராடா இஸýமி, தடுப்பாட்டக்காரர் ரினோ அன்டோ ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்கள் தவிர லால்சாவன்கிமா, அகஸ்டின் பெர்னான்டஸ், அம்ரிந்தர் சிங் மற்றும் குன்ஜாங் பாட்டியா போன்ற 4 உள்நாட்டு நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
   கொல்கத்தா, இந்த முறை தங்கள் அணியில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. ஃபிக்ரு, லூயிஸ் கார்சியா மற்றும் ஜோஃப்ரி மேட் போன்ற முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.
   போர்ச்சுகல் அணியின் இளம் முன்கள வீரர் ஹெல்டர் போஸ்டிகா மீது கொல்கத்தா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். கடந்த சீசனில் சிறந்த வீரருக்கான விருது பெற்ற எய்ன் ஹூயூமி (கனடா), இந்த முறை கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார்.
   கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக இறுதிச் சுற்றில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஹூயூமி, ஃபிக்ருவுக்கு சிறந்த மாற்று வீரராக கருதப்படுகிறார். அவர், போஸ்டிகாவுடன் இணைந்து முன்களத்தில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் செயல்பட்டதை போலவே இந்த முறையும் கொல்கத்தாவின் வெற்றிக்கு போர்ஜா பெர்னான்டஸ் (ஸ்பெயின் நடுக்கள வீரர்) முக்கிய பங்கு வகிப்பார். முன்களம், தடுப்பாட்டம் மற்றும் நடுக்களத்தில் ஆதிக்கம் செலுத்துவது என அவர் பன்முகத் திறமையுடன் விளங்குகிறார்.
   கலை நிகழ்ச்சிகள்: முன்னதாக மாலை 5 மணிக்கு சினிமா நட்சத்திரங்களின் கண்கவர் நடனங்களுடன் இந்தியன் சூப்பர் லீக் தொடக்க விழா நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது. இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai