சுடச்சுட

    

    கோலாகலமாகத் தொடங்கியது 2ஆவது இந்தியன் சூப்பர் லீக்:சென்னையை வென்றது கொல்கத்தா

    By சென்னை  |   Published on : 04th October 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால் பந்துப் போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் சனிக்கிழமை தொடங்கியது.

    இதில், இதில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும், ஐஎஸ்எல் அமைப்பின் தவைவருமான நீதா அம்பானி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினி காந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    தொடக்க விழாவை பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தொகுத்து வழங்கினார். முதலில், பாலிவுட் நடிகை அலியா பட் நடனமாடினார். அவரைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராயின் நடனம் நடைபெற்றது.

    இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மேடைக்கு அழைத்து கெளரவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஐஎஸ்எல் நிறுவனர் நீதா அம்பானி, நடனமாடிய ஐஸ்வர்யா ராய், அலியா பட் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

    ரஜினிக்கு சிறப்பு மரியாதை: அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாகனத்தில் கையில் கால்பந்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அந்தப் பந்தை நீதா அம்பானியிடம் அளித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

    இதையடுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முதல் ஆட்டம்: அதைத்தொடர்ந்து இந்த ஐஎஸ்எல் சீசனுக்கான முதல் ஆட்டம் சென்னை அணிக்கும், நடப்பு ஐஎஸ்எல் சாம்பியனான கொல்கத்தா அணிக்கும் இடையே தொடங்கியது.

    கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் இருந்த அதன் நட்சத்திர வீரர் ஃபிக்ரு, இந்த முறை எலானோ தலைமையிலான சென்னை அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் ஆடத் தொடங்கின. இந்த ஐஎஸ்எல் தொடருக்கான முதல் கோலை அடிக்கும் முனைப்பில் இரு அணிகளும் இருந்தன.

    இந்நிலையில், அந்த வாய்ப்பை கொல்கத்தா அணி தட்டிச் சென்றது. அதற்கான வாய்ப்பை அணி வீரர் போஸ்டிகா பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் இந்த ஐஎஸ்எல் சீசன் மற்றும் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார் போஸ்டிகா. அதைத் தொடர்ந்து சென்னை அணி, தனக்கான கோல் வாய்ப்பை உருவாக்க முனைந்தது.

    இறுதியாக ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் சென்னைக்கான முதல் கோலை அடித்தார் அந்த அணியின் ஜிஜி.

    இதையடுத்து, இரு அணிகளுடன் தலா ஒரு கோலுடன் இருந்த நிலையில் ஆட்டத்தின் பாதி நேரம் முடிந்தது.

    மென்டிஸ் களமிறக்கம்:

    முன்னதாக, 41ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் நைல்சன் காயமடைந்த காரணத்தால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அவருக்குப் பதிலாக சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மென்டிஸ் களமிறக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததை கோலாக மாறவிடாமல் தடுத்தனர் சென்னை அணியினர்.

    இதனிடையே, சென்னை வீரர் ஃபிக்ருவுக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர் 62ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டார்.

    ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் முயற்சிக்கு 2ஆவது பலன் கிடைத்தது.

    அந்த அணியின் போஸ்டிகா தனக்கும், தனது அணிக்குமான இரண்டாவது கோலை அடித்தார். எனினும் அந்த முயற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டு அவரால் மேற்கொண்டு விளையாட இயலாமல் போனது.

    இதையடுத்து ஸ்ட்ரெச்சர் மூலம் அவர் கொண்டு செல்லப்பட்டு, மாற்று ஆட்டக்காரர் களமிறக்கப்பட்டார்.

    சென்னை அணி ஒரு கோலிலேயே திணறி வந்த நிலையில், ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி 3ஆவது கோலை எட்டியது. அந்த அணியின் இயாயின் ஹுமே தூரத்தில் இருந்து அடித்த ஷாட்டை தலையால் முட்டி கோலாக மாற்றினார் சக வீரர் வால்டோ.

    இதனால், கொல்கத்தா அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது சென்னை அணிக்கு ஆட்டத்தின் 89ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. தனது முந்தைய பெனால்டி வாய்ப்புகளை தவற விட்ட எலனோ, இந்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.

    எனினும், தொடர்ந்து சென்னை அணியால் கோல் அடிக்க இயலாத காரணத்தால் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இந்த சீசனுக்கான தனது முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி.

    இரண்டு கோல்கள் அடித்த கொல்கத்தா அணியின் வீரர் போஸ்டிகா ஆட்ட நாயகனாக

    அறிவிக்கப்பட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai