Enable Javscript for better performance
பந்து வீச்சாளர்களிடம் நிலைத்தன்மை இல்லை- Dinamani

சுடச்சுட

    
    dhoni

    இந்திய அணியின் பந்து வீச்சாளர்களிடம் நிலைத்தன்மை இல்லாததே தென் ஆப்பிரிக்காவுடனான தோல்விக்குக் காரணம் என்று அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது இந்திய அணி.

    முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் ரோஹித் சர்மா 66 பந்துகளில் 106 ரன்கள் விளாசினார்.

    200 ரன்கள் இலக்கு: இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஆம்லாவும், டி வில்லியர்ஸýம் மின்னல் வேகத்தில் ரன் குவித்தனர். இந்த ஜோடியைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

    8-ஆவது ஓவரில் ஆம்லா ரன்அவுட்டனார். மறுமுனையில் அச்சுறுத்திக் கொண்டிருந்த டி வில்லியர்ஸ் அரை சதம் அடித்த திருப்தியோடு அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார்.

    டுமினி மிரட்டல்: இதனால், இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தழைத்தது. ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த ஜேபி டுமினியும், பெஹர்டியனும் சூழ்நிலையைத் தலைகீழாக மாற்றினர். குறிப்பாக டுமினி ரன் மழை பொழிந்தார்.

    இறுதியாக, 19.4 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வென்றது. டுமினி 68 ரன்களுடனும், பெஹர்டியன் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக டுமினி தேர்வானார். இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-ஆவது டி-20 போட்டி கட்டாக்கில் வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai