சுடச்சுட

    

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது கோவா

    Published on : 05th October 2015 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    27

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் தில்லி டைனமோஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது எஃப்சி கோவா அணி.
     இரண்டாவது ஐஎஸ்எல் கால்பந்துத் தொடர் சென்னையில் கடந்த சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் உள்ளூர் அணியான சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - தில்லி டைனமோஸ் எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
     ஆட்டத்தின் 3-ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மந்தர் ராவ் தேசாய் அடித்த பந்தை தடுக்கும் முனைப்பில் தில்லி வீரர் சௌவிக் சக்ரவர்த்தி வேகமாக கோல் கம்பத்தை நோக்கி ஓடிவந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக பந்து, அவரது காலில் பட்டு நேரே வலைக்குள் புகுந்தது. இதனால், அது சுயகோலாக மாறியது. முதல் கோல் கிடைத்த மகிழ்ச்சியில் கோவா அணியினர் உற்சாகத்தில் திளைத்தனர்.
     12-ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு மற்றொரு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், லியோனார்டோ மௌரா கீழாக அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு விலகிச் சென்றது. இதன் பிறகு தில்லி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆனால், அவர்கள் கோல் அடிக்க எதிரணியினர் இடமளிக்கவில்லை. முதல் பாதியின் முடிவில் காயமடைந்த நேரத்தை சமன் செய்ய கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது (47-ஆவது நிமிடம்) கிடைத்த "ஃப்ரீ கிக்' வாய்ப்பில் ஜோஃப்ரி கன்ஸாலே பாஸ் செய்த பந்தை, அபாரமாக செயல்பட்ட ரூயினால்டோ (பிரேசில்) கன நேரத்தில் கோல் கம்பத்துக்குள் திணித்தார். இதனால், முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் கோவா அணி முன்னிலைப் பெற்றது.
     இரண்டாவது பாதியிலும் தில்லி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. 72 நிமிடத்தில் தில்லி வீரர் ஃபுளோரன்ட் மலளெடா கோல் அடிக்கும் முயற்சியில் கம்பத்தின் மீது வேகமாக சென்று முட்டிக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக காயமின்றி அவர் தப்பினார்.
     தில்லி அணியினரின் 10 முயற்சிகளை கோவா கோல் கீப்பர் ஆன்ட்ராடி அபாரமாக முறியடித்தார். தில்லி வீரர்கள் பெரும்பாலான நேரங்களில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அவர்களின் கோல் முயற்சி கடைசி வரை கைகூடவில்லை. முடிவில், 2-0 என்ற கணக்கில் கோவா அணி வெற்றி கண்டது.
     இன்றைய ஆட்டம்
     எஃப்சி புணே சிட்டி -
     மும்பை சிட்டி எஃப்சி
     நேரம்: இரவு 7 மணி, இடம்: புணே
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai