சுடச்சுட

  

  பிசிசிஐ தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றித் தேர்வு

  By மும்பை,  |   Published on : 05th October 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  26

  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவராக சஷாங் மனோகர் ஞாயிற்றுக்கிழமை போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
   பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி கொல்கத்தாவில் காலமானார். இதனால் பிசிசிஐ-க்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்பட்டது.
   பிசிசிஐ-யின் செயலர் அனுராக் தாக்குர் தலைமையில் ஒரு அணியினரும், முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் தலைமையில் மற்றொரு அணியினரும் புதிய தலைவர் பதவிக்கு தங்களது ஆதரவாளர்களை நிறுத்த முயற்சித்தனர்.
   சீனிவாசன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அனுராக் தாக்குர் தலைமையிலான குழுவினர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவரது இல்லத்தில் சந்தித்து, சஷாங் மனோகரை ஒருமனதாக தலைவர் பதவிக்கு நிறுத்த முடிவு செய்தனர். இந்த முடிவை முதலில் சஷாங் மனோகர் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், ஜேட்லி உள்ளிட்டோர் அவரை சமாதானப்படுத்தி ஒப்புக் கொள்ளவைத்தனர். இதற்கிடையே சரத்பவார், சீனிவாசனுடன் இணைந்து செயல்படுவதற்கு முன்வரவில்லை.
   போட்டியின்றி தேர்வு: இந்நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி சஷாங் மனோகர் மட்டுமே தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
   பிசிசிஐ-யின் சிறப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், சஷாங் மனோகர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
   சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
   இதனால், சீனிவாசன் கடந்த மார்ச் மாதம் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன் பிறகு அவரது ஆதரவாளரான ஜக்மோகன் டால்மியா, அந்த பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் டால்மியாவின் மறைவுக்குப் பின்னர் சஷாங் மனோகர் புதிய தலைவராக தேர்வாகியுள்ளார். அவரது பெயரை கிழக்கு மண்டல கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த 6 நிர்வாகிகளும் முன்மொழிந்தனர்.
   சீனிவாசன் பங்கேற்கவில்லை: தேசிய கிரிக்கெட் கிளப் (என்சிசி) சார்பில் டால்மியாவின் மகன் அபிஷேக்கும் சஷாங் பெயரை முன்மொழிந்தார். அவர் தவிர, சௌரவ் கங்குலி (மேற்கு வங்கம்), சௌரவ் தாஸ் குப்தா (திரிபுரா), கௌதம் ராய் (அஸ்ஸாம்), ஆஷிர்வாத் பெஹேரா (ஒடிஸா), சஞ்சய் சிங் (ஜார்க்கண்ட்) ஆகியோரும் சஷாங் மனோகர் பெயரை தலைவர் பதவிக்கு முன்மொழிந்தனர்.
   நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு காரணமாக சீனிவாசன் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பில் பி.எஸ்.ராமன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
   சஷாங் மனோகர் மீண்டும் பிசிசிஐ தலைவராகியிருப்பதால் இந்த அமைப்பில் சீனிவாசனின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், அவரது ஐசிசி சேர்மன் பதவியும் ஆட்டம் கண்டுள்ளது.
   புதிய தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில், "கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்கள் மற்றும் மக்களை கொண்டுள்ள நாடு இந்தியா என்பதால் பிசிசிஐ புகழ்மிக்க அமைப்பாக உள்ளது. சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் ரசிகர்களின் நம்பிக்கை சிறிது தடுமாற்றம் கண்டது.
   பிசிசிஐ-க்கு மீண்டும் புகழை பெற்றுத் தரவேண்டியது அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் கடமையாகும்' என்றார்.
   இரண்டாவது முறையாக தலைவர் பதவி
   விதர்பாவை சேர்ந்த சஷாங் மனோகர் (58) கடந்த 10 ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2008-11 ஆம் ஆண்டு வரை அவர் ஏற்கெனவே பிசிசிஐ தலைவர் பதவியை வகித்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் தான் இந்தியா, 28 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை மீண்டும் வென்றது.
   இந்த சிறப்பை பெற்றுத் தந்த இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் சூதாட்டத்தில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் சஷாங் மனோகரும் ஒருவர். இரண்டாவது முறையாக பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai