Enable Javscript for better performance
இரண்டாவது டி-20 ஆட்டத்தில் 92 ரன்களுக்கு சுருண்டது இந்தியா: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா- Dinamani

சுடச்சுட

  

  இரண்டாவது டி-20 ஆட்டத்தில் 92 ரன்களுக்கு சுருண்டது இந்தியா: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

  By கட்டாக்,  |   Published on : 06th October 2015 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  21

  தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
   இதையடுத்து, மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
   கட்டாக்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
   முதலில் ஆடிய இந்தியா, 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்து, ஏமாற்றம் அளித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
   முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததால், அதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள் வாணவேடிக்கை காட்டுவார்கள் என ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
   இந்தியத் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் களமிறங்கிறனர். 2 பவுண்டரிகளை அடித்த தவண், தென் ஆப்பிரிக்க வீரர் மோரீஸின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
   12 பந்துகளைச் சந்தித்த அவர், 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி, வெறும் ஒரு ரன்னை மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
   அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, சற்று நிதானமாக ஆடினார். இதனிடையே, அணியின் ஸ்கோர் 43-ஆக இருந்தபோது மறுமுனையில் இருந்த ரோஹித் சர்மா ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
   மொத்தம் 24 பந்துகளைச் சந்தித்த அவர், 22 ரன்களை எடுத்தார். அதில் 2 பவுண்டரிகளும் அடக்கம். அதன் பிறகு களமிறங்கிய அம்பாதி ராயுடு (0), கேப்டன் தோனி (5) ஆகியோர் ஒரு சில நிமிடங்களே மைதானத்தில் நின்றனர்.
   இதற்கிடையே 3 பவுண்டரிகளை விளாசிய ரெய்னா, 22 ரன்கள் எடுத்திருந்தபோது, தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரின் பந்தை அடிக்க முற்பட்டார். அது ஆம்லாவிடம் கேட்சானது. அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ரெய்னாவும் வெளியேறியதால், ரசிகர்களிடம் அதிருப்தி வெளிப்பட்டது.
   69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இந்திய அணி இருந்தது. அணியின் ஸ்கோர் 100 ரன்களையாவது எட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்போது நிலவியது.
   ஆனால், அதற்கு அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்பஜன் சிங் (0), அக்ஷர் படேல் (9), புவனேஸ்வர் குமார் (0) ஆகியோர் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கும் வகையில் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
   தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
   இதையடுத்து, 17.2 ஓவர்களில் 92 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில் உபரியாக 11 ரன்கள் கிடைத்தன. அதுவும் இல்லையென்றால் இந்திய அணி 80 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
   தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ஆல்பி மோர்கெல் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரீஸ், இம்பான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
   93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
   2-ஆவது ஓவரை அஸ்வின் வீசியபோது ஆம்லா ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் 16 ரன்களுக்கும், ஏபி டிவில்லியர்ஸ் 19 ரன்களுக்கும் வெளியேறினர்.
   அதேவேளையில் ஜேபி டுமினி, பெஹர்டியனுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
   பெஹர்டியன் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, அக்ஷர் படேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து டேவிட் மில்லர் களமிறங்கி ஒரு சிக்ஸர் அடித்தார். 17.1-ஆவது ஓவரில் 96 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. மில்லர் 10 ரன்களுடனும், டுமினி 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
   இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆல்பி மோர்கெல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
   ரசிகர்கள் திடீர் ரகளை
   இந்திய அணி தோல்வியை எதிர்நோக்கியிருந்த நிலையில், ஆட்டத்தின் 11-ஆவது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர் பாட்டில்களை வீசினர்.
   இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் மைதானத்தில் அமர்ந்தனர். அந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்கா அணி, 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போதும் ரசிகர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபடவே 13 ஓவர்களுடன் போட்டி நிறுத்தப்பட்டது.
   ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகே தென் ஆப்பிரிக்க வீரர்கள் மீண்டும் களமிறங்கினர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.
  32.jpg

  33.jpg 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai