சுடச்சுட

    
    24

    துன்கே சன்லி அபாரமாக விளையாடி 2 கோல்கள் அடித்து உதவ, 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தியது புணே அணி.
     இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் புணேயில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
     இதில் 12-ஆவது நிமிடத்தில் இடது புறத்திலிருந்து கோல் கம்பத்தை நோக்கி இஸ்ரய்ல் குருங் அடித்த பந்தை, அங்கு நின்ற துன்கே சன்லி, தலையால் முட்டி அபாரமாக கோல் கம்பத்துக்குள் அனுப்பினார்.
     மும்பை அணியின் கோல் கீப்பரால் இதனை தடுக்க இயலவில்லை. இதனால், இந்த ஆட்டத்தில் புணே அணி முதலில் கோல் கணக்கைத் தொடங்கியது. முன்னதாக 9-ஆவது நிமிடத்தில் சன்லி முரட்டுத்தனமாக விளையாடியதால் நடுவர், அவருக்கு மஞ்சள் அட்டையை நீட்டினார்.
     நழுவிய "ஹாட்ரிக்': இதன் பிறகு புணே அணிக்கு பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் ஆயத்தமானார்கள். 34-ஆவது நிமிடத்தில் ஆஷுடோஸ், எதிரணியினரிடமிருந்து லாவகமாக பந்தை கடத்தி முன்கள வீரர் ஃபெரடெரிக் பிக்கியோன்னி வசம் பாஸ் செய்தார். அவர், அதனை அசத்தலாக தனது தலையால் முட்டி வலைக்குள் செலுத்தினார். 1-1 என்ற கணக்கில் புணே அணி, சமநிலைப் பெற்றது. அந்த சமயத்தில் எதிரணியினரை காட்டிலும் புணே வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டனர்.
     இரண்டாவது பாதியில் புணே வீரர்களில் மாற்றம் செய்தது. நடுக்கள வீரர் ஜேம்ஸ் பெய்லிக்கு பதிலாக முன்கள வீரர் ஹெண்டரிக் ரூயிஸ் அணியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 56-ஆவது நிமிடத்தில் இஸ்ரய்ல் - சன்லி கூட்டணி, புணே அணிக்கு மேலும் ஒரு கோல் பெற்றுத் தந்தது.
     சன்லிக்கு ஹாட்ரிக் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. 60-ஆவது நிமிடத்தில் சன்லிக்குப் பதிலாக மார்க்கியூ வீரர் அட்ரியான் முடுவை களமிறக்கினார் புணே பயிற்சியாளர் டேவிட் பிளாட்.
     68-ஆவது நிமிடத்தில் புணே வீரர் இஸ்ரய்ல் குருங் வலது ஓரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி வேகமாக ஷாட் அடித்தார்.
     மும்பையின் கோல் கீப்பர் கீகன் பெரைரா அதனை எகிறி பாதுகாக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கைக்கு அகப்படாமல் உயரே சென்று கோல் வலைக்குள் புகுந்தது. இதனால் 3-1 என்ற கணக்கில் புணே அணி வலுவான முன்னிலைப் பெற்றது.
     புணே வெற்றி: மும்பை வீரர்களின் பதிலடி முயற்சிக்கு இறுதி வரை பலன் கிடைக்கவில்லை. வழக்கமான நேரத்துக்குப் பின்னர் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த சமயத்தில் லென்னி ரெட்ரிக்யூஸுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் சுஷாந்த் மாற்று வீரராக களமிறங்கினார். கூடுதல் நேரத்தில் இரு அணிகளிக்கும் மேற்கொண்டு கோல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், 3-1 என்ற கணக்கில் புணே அணி வெற்றி பெற்றது.
     இன்றைய ஆட்டம்
     கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி
     வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி
     நேரம்: இரவு 7 மணி, இடம்: கொச்சி

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai