Enable Javscript for better performance
கோவா - கொல்கத்தா இடையிலான ஆட்டம் \\\"டிரா\\\'- Dinamani

சுடச்சுட

    
    23

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற எஃப்சி கோவா - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகளிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
     இரண்டாவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற 7-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
     ஆட்டத்தின் 13-ஆவது நிமிடத்திலேயே நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணி முதல் கோலை பதிவு செய்தது.
     வலது ஓரத்தில் இருந்து ஜாவி லாரா உதைத்த பந்தை, இயான் ஹியூமி பாஸ் செய்ய முயன்றார். அதற்குள் பின்னால் இருந்த அராடா இஸுமி பந்தை உதைக்க, அது கண்ணிமைக்கும் நேரத்தில் கோலாக மாறியது.
     இதற்கு பதிலடி கொடுக்க 29-ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை, கோவா அணியினர் கோட்டைவிட்டனர். ஜோஃப்ரி உதைத்த பந்தை எதிரணியின் டென்சில் பிரான்ஸ்கோ இடைமறித்தார்.
     முதல் சிவப்பு அட்டை: இதனால், முதல் பாதியில் கோவா அணியால் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. 61-ஆவது நிமிடத்தில் பந்து உதைப்பதில் கொல்கத்தா வீரர் பல்ஜித் சஹானிக்கும் கோவா அணியின் தடுப்பாட்டக்காரர் அர்னோலின் கிரிகோரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பல்ஜித் திடீரென கிரிகோரியின் தலையில் முட்டினார். இதனால், பல்ஜித்துக்கு நடுவர் மஞ்சள் அட்டை நீட்டினார். கோபம் குறையாத பல்ஜித், நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொல்கத்தா அணியின் மற்ற வீரர்களும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
     தொடர்ந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்ததால் பல்ஜித்துக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதனால், அவர் வேறு வழியின்றி களத்திலிருந்து வெளியேறினார். இந்த சீசனில் முதல் சிவப்பு அட்டை பெற்ற வீரர் பல்ஜித் ஆவார்.
     தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 வீரர்களுடன் விளையாடியது. 81-ஆவது நிமிடத்தில் கீனான் அல்மெய்டா கோவா அணிக்கு முதல் கோலை அடித்துத் தந்தார். கோல் கம்பத்துக்கு 6 யார்டு தொலைவிலிருந்து அவர் வேகமாக அடித்த ஷாட், அம்ரிந்தரின் (கொல்கத்தா கோல்கீப்பர்) கைக்கு சிக்காமல் வலைக்குள் சென்றது. இதனால், கோவா வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
     டிராவில் முடிந்தது: வழக்கமான ஆட்டநேரத்தோடு கூடுதலாக 7 நிமிடம் வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் கூடுதல் கோல் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உஷாராக விளையாடிய இரு அணி வீரர்களும் அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. தற்போது இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன.
     இன்றைய ஆட்டம்
     தில்லி டைனமோஸ் எஃப்சி
     சென்னையின் எஃப்சி
     நேரம் : இரவு 7 மணி, இடம்: தில்லி
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai