சுடச்சுட

  

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

  By  கொல்கத்தா,  |   Published on : 08th October 2015 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  21

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
   இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று டி-20, 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலிரண்டு டி-20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி டி-20 தொடரை கைப்பற்றியுள்ளது.
   மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
   அடுத்து நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு முன்பாக வெற்றியை பெறவேண்டும் என்பதில் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி குறிக்கோளுடன் உள்ளார்.
   ரஹானே, மிஸ்ரா: அம்பாதி ராயுடுவுக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானேவையும், அக்ஷர் படேலுக்குப் பதிலாக அமித் மிஸ்ராவுக்கும் கடந்த ஆட்டத்தில் தோனி வாய்ப்பளிக்காதது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
   தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் 2-ஆவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்த பிறகு, கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 41 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்தப் போட்டியில், இந்தியா 220 ரன்கள் வரை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
   ஆனால், கடைசிநேரத்தில் பேட்டிங்கின் வேகம் குறைந்தது. அதேபோல, கட்டக்கில் நடைபெற்ற 2-ஆவது டி-20 போட்டியில், இந்திய அணியினரின் பேட்டிங் மொத்தமாக ஆட்டம் கண்டது. கடந்த இரு போட்டிகளிலும் செய்த தவறை இந்திய வீரர்கள் இந்த ஆட்டத்தில் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
   ஈடன் கார்டன் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சிறப்பாக கைகொடுக்கும். இதனை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சூழலில் மிஸ்ராவுக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால், தோனியின் முடிவைப் பொருத்தே அவர் களமிறங்குவாரா, மாட்டாரா என்பது தெரியவரும்.
   ஆறுதல் வெற்றி? இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப் பெரும் பலமாகத் திகழ்கிறார். தென் ஆப்பிரிக்க அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ûஸ அவர், இந்தத் தொடரில் 2 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். கடைசி ஆட்டத்திலும் அஸ்வின் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் முனைப்பில் உள்ளார்.
   டி-20, ஒரு நாள் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் இந்திய அணியை சிகரம் தொடவைத்த தோனி, இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றியையாவது பெற்றுத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
   தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை அல்பி மோர்கெல் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். டி-20 போட்டியில், இது அவரது சிறந்த பந்துவீச்சாக பதிவானது.
   அவர் தவிர இம்ரான் தாஹிர் சிறந்த சுழல்பந்துவீச்சாளராக விளங்குகிறார். பேட்டிங்கில் அசத்தக்கூடிய ஜே.பி.டுமினி, பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராகவும் இருக்கிறார்.
   இரு அணி வீரர்கள் விவரம்:
   இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, அக்ஷர் படேல், ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், மோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீநாத் அரவிந்த்.
   தென் ஆப்பிரிக்கா: ஃபாப் டுபிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, ஏபி டி வில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜே.பி.டுமினி, ஃபர்ஹான் பெஹர்டியன், டேவிட் மில்லர், கிறிஸ் மோரீஸ், ககிசோ ரபடா, கைல் அபோட், அல்பி மோர்கெல், இம்ரான் தாஹிர், குவின்டன் டி காக், எட்டி லீ, மர்சென்ட் டி லங்கி, கயா ஜோண்டோ.
   "நாங்கள் தொடரை இழந்துவிட்டோம். ஆனால், கடைசி போட்டியில் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டால் அதன் பிறகு எங்களை தோற்கடிப்பது கடினம். ஈடன் கார்டனில் எனது கடைசி போட்டியை விளையாட விரும்புகிறேன்'
   -ஹர்பஜன் சிங், இந்திய வீரர்.
   "2-0 என்ற கணக்கில் போட்டியில் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம். அதனை 3-0 என்ற கணக்கில் மாற்ற தீர்மானித்துள்ளோம். சர்வதேச கிரிக்கெட்டில் உத்வேகமும், நம்பிக்கையும் முக்கியமானதாகும். இந்த ஆட்டத்திலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்'
   -டேவிட் மில்லர், தென் ஆப்பிரிக்க வீரர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai