சுடச்சுட

    

    ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் இடைநீக்கம்: பிளாட்டினி மீதும் நடவடிக்கை

    Published on : 09th October 2015 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்வதேச கால்பந்து சங்க (ஃபிஃபா) தலைவர் ஜோசப் பிளேட்டர் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஃபிஃபாவின் தன்னாட்சிமிக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
     ஃபிஃபா தலைவராக இருந்தவர் செப் பிளேட்டர் (79). சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி ஃபிஃபா தலைவராக 5-ஆவது முறையாக தேர்வானார்.
     இந்த தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஃபிஃபாவில் நடந்த முறைகேடுகளுக்காக அதன் உயர் அதிகாரிகள் 7 பேரை சுவிட்சர்லாந்து போலீஸார் கைது செய்தனர். இதன் எதிரொலியாக பிளேட்டர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று உலகம் முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்தன.
     இதனால் 5-ஆவது முறையாக பதவியேற்ற ஒரு சில நாள்களிலேயே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே பதவியிலிருந்து விலகுவதாக பிளேட்டர் அறிவித்தார். ஃபிஃபாவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் சிறப்பு மாநாடு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுவரை தானே தலைவர் பதவியில் தொடரப் போவதாகவும் பிளேட்டர் அறிவித்திருந்தார்.
     பிளாட்டினியின் திடீர் மாற்றம்: பிளேட்டரின் இந்த முடிவு ஐரோப்பிய கால்பந்து சங்கத் தலைவர் (யுஇஎஃப்ஏ) மைக்கேல் பிளாட்டினி, பிரேசில் முன்னாள் வீரர் ஜிகோ, ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹூசைன் ஆகியோருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இவர்கள் அனைவரும் ஃபிஃபா தலைவர் பதவியை குறிவைத்திருப்பதால் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய வரும் 26 ஆம் தேதி கடைசி நாளாகும்.
     பிளேட்டர் மீது விசாரணை கோரி வந்த பிளாட்டினி, கடந்த 2011 ஆம் ஆண்டு அவரிடமிருந்து ரூ.13 கோடி ரொக்கம் பெற்றுள்ளார்.
     அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் அவர் திடீரென பிளேட்டருக்கு ஆதரவாக செயல்பட்டார். மேற்கண்ட தொகைக்காகவே பிளாட்டினி தனது முடிவை மாற்றிக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.
     இதேபோல, ஃபிஃபா பொது செயலாளர் ஜெரோம் வால்க்கி, தென் கொரியாவின் சங் மங்-ஜூன் ஆகிய இருவரும் மற்றொரு ஊழல் தொடர்பாக விசாரணை வளையத்தில் சிக்கினர்.
     இடைநீக்கம்: இந்நிலையில் மேற்கண்ட 4 பேரும் ஃபிஃபா அமைப்பிலிருந்து 90 நாள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
     ஃபிஃபாவின் தன்னாட்சிமிக்க நீதி விசாரணைக் குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய மற்றும் சர்வதேச அளவில் கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் இவர்கள் நான்கு பேரும் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.
     இந்த தடையுத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் மூலம் ஃபிஃபா அமைப்பில் பிளேட்டரின் அதிகாரம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்பிய பிளாட்டினிக்கு சிக்கல் எழுந்துள்ளது.
     பிளேட்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஃபிஃபாவின் தலைவர் பதவியை யார் கவனிப்பார்கள் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai