சுடச்சுட

  

  உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று:துர்க்மேனிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி

  Published on : 09th October 2015 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் துர்க்மேனிஸ்தானிடம் இந்திய அணி வியாழக்கிழமை தோல்வியைத் தழுவியது.
   வரும் 2018 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஆசிய கண்டத்தில் பங்கேற்றுள்ள 40 அணிகளில் இந்திய அணி "டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
   இந்தப் பிரிவில் ஈரான், ஓமன், குவாம், துர்க்மேனிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றின் 4-ஆவது போட்டியில் இந்தியா - துர்க்மேனிஸ்தான் அணிகள் வியாழக்கிழமை மோதின.
   துர்க்மேனிஸ்தானின் அஷ்காபத்தில் இப்போட்டி நடைபெற்றது. இந்திய அணியில் கேப்டன் சுனில் சேத்ரி, ஜிஜி லால்பெகுலா மற்றும் ராபின் சிங் ஆகியோர் முன்வரிசையில் ஆதிக்கம் செலுத்தினர்.
   இரு அணிகளும் சமநிலை: இந்திய வீரர் பிரான்ஸிஸ் பெர்னான்டஸ் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு விலகியதால் இந்திய அணியின் முதல் வாய்ப்பு நழுவியது. 8-ஆவது நிமிடத்தில் எதிரணியின் அபிலோவ் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
   இதற்கு 29-ஆவது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஜிஜி அடித்த பந்தை துர்க்மேனிஸ்தான் கோல்கீப்பர் மம்மெத் தடுத்தார். ஆனால், அவர் மீது ஜிஜி பாய்ந்ததால் பந்து நழுவி வலைக்குள் சென்றது. முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
   இரண்டாவது பாதியில், 60-ஆவது நிமிடத்தில் அமானவ் ஒரு கோல் அடிக்க, துர்க்மேனிஸ்தான் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் கூடுதல் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன்கிட்டவில்லை.
   துர்க்மேனிஸ்தான் வெற்றி: வழக்கமான நேரத்துக்குப் பின்னர் 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதிலும் இதே நிலையே தொடர்ந்தது. முடிவில் 2-1 என்ற கணக்கில் துர்க்மேனிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு மங்கியுள்ளது.
   இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இந்திய அணி "டி' பிரிவில் கடைசி இடம் வகிக்கிறது.
   இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஓமன் அணியை மஸ்கட்டில் வரும் 13ஆம் தேதி எதிர்கொள்கிறது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai