சுடச்சுட

    

    ஐஎஸ்எல் கால்பந்து: எதிர்பாராத கோலால் புணே வெற்றி

    By  புணே,  |   Published on : 10th October 2015 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    21

    வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி அணிக்கு எதிரான ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் ரால்டியின் எதிர்பாராத கோலால், புணே சிட்டி எஃப்சி அணி எளிதாக வெற்றி பெற்றது.
     ஐஎஸ்எல் போட்டியில் புணேவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 7-ஆவது லீக் போட்டியில் எஃப்சி புணே சிட்டி - வடகிழக்கு யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வீரர்களிடையே வேகமும் விறுவிறுப்பும் காணப்பட்டது. ஆரம்பகட்டத்தில் நடுக்கள வீரர்களிடையே பந்து சுழன்று கொண்டிருந்தது.
     14-ஆவது நிமிடத்தில் வடகிழக்கு அணியின் சிலாஸ், புணே அணியின் மணீஷ் மைதானி (16 ஆவது நிமிடம்) ஆகியோரின் முரட்டுத் தன ஆட்டத்துக்கு நடுவர்கள் மஞ்சள் அட்டை காட்டினர். அப்போது கிடைத்த ஃப்ரீ கிக்கில் கோல் அடிக்கும் முயற்சியை எதிரணியினர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தனர். இதேபோல 39-ஆவது நிமிடத்தில் வடகிழக்கு அணிக்கு ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சஞ்சு பிரதான் தலையால் முட்டித் தள்ளிய பந்து கம்பத்தை விட்டு விலகிச் சென்றது.
     தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணி வீரர்களின் முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் கீப்பர்களுக்கு பெரிய அளவில் வேலை கொடுக்காததால் ஸ்கோர் 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது.
     சுய கோல்: 56-ஆவது நிமிடத்தில் வடகிழக்கு அணியின் டியோமன்ஸி கமாரா ஒரு கோல் வாய்ப்பை தவறவிட்டார். நிக்கோலஸ் வீலெஸ் கொடுத்த பாûஸ, கமாரா இலக்கைவிட்டு வெளியில் அடித்தது அந்த அணியினருக்கு ஏமாற்றம் அளித்தது.
     73-ஆவது நிமிடத்தில் புணே வீரர் ரால்ரெம்புயாவுக்கு கார்னர் கிக் கிடைத்தது. அவர் எறிந்த பந்தை தடுப்பதற்க்காக வடகிழக்கு அணியின் ஜோமிங்லியானா ரால்டி பந்தை இடைமறித்தார். ஆனால், அது சொந்த அணியின் கோல் வலைக்குள் சென்று விழுந்தது.
     சுயகோல் அடித்த அதிர்ச்சியில் உறைந்தார் ரால்டி. அதேநேரத்தில் முதல் கோல் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தனர் புணே வீரர்கள்.
     இதன் பின்னர் குறைந்தபட்சம் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவர வடகிழக்கு அணியினர் முயன்றனர். ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் புணே அணி வெற்றி பெற்றது. இது, புணேவுக்கு 2-ஆவது வெற்றியும், வடகிழக்கு அணிக்கு 2-ஆவது தோல்வியுமாகும்.
     இன்றைய ஆட்டம்
     கேரள பிளாஸ்டர்ஸ்
     மும்பை சிட்டி எஃப்சி
     நேரம் : இரவு 7 மணி, இடம்: கொச்சி.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai