சர்வதேச குத்துச்சண்டை போட்டி :பதக்கத்தை உறுதி செய்தார் ஷிவ தாபா
By தோஹா | Published on : 11th October 2015 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஷிவ தாபா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதி போட்டியில் இந்திய வீரர் ஷிவ தாபா, உள்ளூர் வீரரான ஹகன் எர்சேகரை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஷிவ தாபா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஒரு வெற்றி தேவை: இதன் மூலம் அவருக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கமாவது கிடைக்கும். இதன் மூலம், விஜேந்தர் சிங் (2009), விகாஸ் கிருஷண் (2011) ஆகியோருக்கு அடுத்தபடியாக சர்வதேச சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 3-ஆவது இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெறுவார். மேலும், பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஷிவ தாபாவுக்கு இன்னும் ஒரு வெற்றியே தேவை. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஷிவதாபா, தனது அரையிறுதி ஆட்டத்தில் உஸ்பெஸ்கிஸ்தானின் முரோட்ஜான் அஹமதாலீவை எதிர்கொள்கிறார்.
விகாஸ் தோல்வி: ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஸ் கிருஷண் 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் எகிப்து வீரர் ஹசாம் அப்தினிடம் தோல்வியைத் தழுவினார். இப்போட்டி குறித்து இந்திய பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங் சாந்து கூறுகையில், "விகாஸ் தோல்வியடைந்தது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், இறுதிப் போட்டி வரை முன்னேறுவார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்' என்றார்.