Enable Javscript for better performance
முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா \\\"த்ரில்\\\' வெற்றி: ரோஹித் சர்மாவின் 150 ரன்கள் வீண்- Dinamani

சுடச்சுட

  

  முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா "த்ரில்' வெற்றி: ரோஹித் சர்மாவின் 150 ரன்கள் வீண்

  By கான்பூர்,  |   Published on : 12th October 2015 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  19

  உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் "த்ரில்' வெற்றி பெற்றது.
   இந்திய வீரர் ரோஹித் சர்மா அடித்த 150 ரன்கள் வீணானது.
   முன்னதாக, டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவின்டன் டி காக்கும், ஹஷிம் ஆம்லாவும் நிதானமாகவும், அதே நேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் விளையாடினர். அந்த அணியின் ஸ்கோர் 45ஆக இருந்தபோது, இந்த ஜோடி பிரிந்தது. 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் வீசிய பந்தை டி காக் அடித்து ஆடியபோது அது ரெய்னாவின் கைகளில் தஞ்சமடைந்தது.
   டி வில்லியர்ஸ் சதம்: அதைத் தொடர்ந்து, 2ஆவது விக்கெடுக்கு ஆம்லாவுடன் டு பிளெஸ்ஸிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 21.3 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 100 ரன்களை எட்டியது. இந்நிலையில், 37 ரன்கள் எடுத்திருந்த ஆம்லா, அமித் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரும், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனுமான டி வில்லியர்ஸ் ஆரம்பம் முதலே அபாரமாக அதிரடியில் ஈடுபட்டார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த டு பிளெஸ்ஸிஸ், சிக்சர் அடித்து தனது அரை சதத்தை பதிவு செய்தார். 62 ரன்கள் எடுத்திருந்தபோது, உமேஷ் யாதவ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் டு பிளெஸ்ஸிஸ் அவுட்டானார்.
   அதன்பின்னர் வந்த டேவிட் மில்லர் (13), டுமினி (15) ஆகியோர் அதிக நேரம் மைதானத்தில் நிற்கவில்லை. அவர்கள் இருவரும் முறையே அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டாகி வெளியேறினர்.
   6ஆவது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸுடன் பெஹர்டியன் கைகோர்க்கவே, தென் ஆப்பிரிக்காவின் ரன்ரேட் மளமளவென உயர்ந்தது. 54 பந்துகளில் 50 ரன்கள் குவித்த டி வில்லியர்ஸ், அடுத்த 23 பந்துகளில் மேலும் 50 ரன்களை திரட்டி சதமடித்தார். முடிவில், 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி, 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 104 ரன்களுடன் (5 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் அடங்கும்), பெஹர்டியன் 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில், உமேஷ் யாதவும், அமித் மிஸ்ராவும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஸ்வின் ஒரு விக்கெட் சாய்த்தார். காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய அஸ்வின் 6 ஒவர்கள் வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
   ரோஹித், ரஹானே ஜோடி: இதையடுத்து, 304 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா தனது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவண், 23 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 42ஆக இருந்தது. பின்னர், 2ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவும், அஜிங்கியா ரஹானேவும் இணைந்தனர். இந்த ஜோடியை பிரிக்க தென்னாப்பிரிக்க வீரர்கள் பலமுறை முயன்றும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 48 பந்துகளில் அரை சதத்தையும், 98 பந்துகளில் தனது 8ஆவது ஒருநாள் சதத்தையும் ரோஹித் சர்மா பதிவு செய்தார். அதேபோல, ரஹானேவும் 67 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
   சிறப்பாக விளையாடிய ரஹானே, 60 ரன்களில் பெஹர்டியனின் பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு களம்புகுந்த துணைக் கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் அவுட்டானார். இந்நிலையில், 132 பந்துகளில் 150 ரன்களை ரோஹித் சர்மா குவித்தார். இதன்மூலம், தெண்டுல்கருக்கு (200) பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் புரிந்தார்.
   இந்த சூழ்நிலையில், ரோஹித் சர்மா அதிர்ச்சியளிக்கும் விதமாக 150 ரன்களில் இம்ரான் தாஹிர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரெய்னா ஆகியோர் களத்தில் இருந்ததால் சிறிது நம்பிக்கை நிலவியது.
   "த்ரில்' வெற்றி: ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக ரெய்னா (3 ரன்கள்), டோனி (31), ஸ்டுவர்ட் பின்னி (2)ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக, கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி அவுட்டானது, ஆட்டத்தின் போக்கையே திசை மாற்றிவிட்டது. முடிவில், 50 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்களை மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் "த்ரில்' வெற்றி பெற்று, போட்டித் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
   இரு அணிகள் இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
   "பழியைச் சுமந்துதான் ஆக வேண்டும்'
   போட்டிக்குப் பின்னர் இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:
   கீழ்வரிசையில் பேட்டிங் செய்தால் பழியைச் சுமந்துதான் ஆகவேண்டும். இதுபோன்ற சூழலில் நிறைய போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்திருந்தாலும், அதைவிட தோல்வியடைந்த ஆட்டங்களையே பெரும்பாலும் மக்கள் நினைவில் கொள்வர்.
   "ஃபினிஷர்'ஆக களமிறங்குவது என்பது கிட்டத்தட்ட பந்தயம் போன்றதுதான். சிலநேரங்களில் கைகொடுக்கும். சில நேரங்களில் கைகொடுக்காது. ஆனால் அணியில் இந்த பொறுப்பைதான் நான் ஏற்றிருக்கிறேன்.
   இந்த ஆட்டத்தில் அஸ்வினின் 6 ஓவர்களை நாங்கள் இழந்துவிட்டோம். கடைசி 10 ஓவர்கள் சிறப்பாக அமையவில்லை. அந்த நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியினர் தங்களின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திவிட்டனர் என்றார் அவர்.
   காயம்: அஸ்வின் விலகல்?
   இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
   முதலாவது ஒரு நாள் போட்டியில் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல் முழுவதையும் பரிசோதித்து காயத்திலிருந்து அஸ்வின் முழுவதும் மீண்டு வருவதற்கு எவ்வளவு கால அவசாகம் தேவை என்பதை பிசிசிஐ மருத்துவக் குழு முடிவு செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
   அஸ்வினுக்குப் பதிலாக ஹர்பஜன்சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தூரில் நடைபெறவுள்ள 2ஆவது போட்டிக்கு முன்னதாக அவர் அணியுடன் சேர்ந்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   துளிகள்...!
   * இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த (5) ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு முன்னர் கடந்த 2000ஆம் ஆண்டில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருந்தது.
   * கான்பூர் மைதானத்தில் 300 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த முதல் அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்க அணி பெற்றுள்ளது.
   28.jpg
   
  29.jpg 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai