Enable Javscript for better performance
மியான்தத் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் யூனிஸ்கான்- Dinamani

சுடச்சுட

    
    15

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாவேத் மியான்தத் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் யூனிஸ்கான் உள்ளார்.
     இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் யூனிஸ் கான் (37), தற்போது 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8,814 ரன்கள் எடுத்துள்ளார்.
     கடந்த 1976ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் விளையாடிய முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத், 124 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8,832 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை இவர் வசமே உள்ளது.
     யார் சிறந்த வீரர்? இந்நிலையில், ஜாவேத் மியான்தத்தின் இந்த சாதனையை சமன் செய்ய யூனிஸ்கானுக்கு இன்னும் 19 ரன்களே தேவை. இங்கிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் மியான்தத்தின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் யூனிஸ்கான் உள்ளார்.
     இது தொடர்பாக அவர் கூறியதாவது:
     இது, சிறந்த சாதனையாக இருக்கும். கடந்த 2000ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும்போது மியான்தத்தின் சாதனையை நெருங்குவேன் என்று நினைக்கவில்லை. மியான்தத்தின் சாதனையை கடந்தால் கூட அவரின் பெருமைகளுக்கு முன்னால் நான் சாதாரணமானவனே.
     சாதனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் நான் எனது நாட்டுக்காகவே பேட்டிங் செய்ய விரும்புகிறேன். சாதனைகள் எனது சிறந்த அடையாளம் கிடையாது. நாட்டுக்காக விளையாடுபவர்களையே நான் சிறந்த பேட்ஸ்மேனாக அங்கீகரிக்கிறேன் என்றார் யூனிஸ் கான்.
     மியான்தத்தை போலவே தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் யூனிஸ் கானும் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai