சுடச்சுட

    

    ஐஎஸ்எல்: சொந்த மண்ணில் கேரள அணியை வென்றது கொல்கத்தா

    By கொல்கத்தா,  |   Published on : 14th October 2015 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    21

    ஐஎஸ்எல் போட்டியில் கேரளத்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
     இந்த இரு அணிகள் இடையேயான ஆட்டத்தைக் காண பிரேஸில் நாட்டு முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே மைதானத்துக்கு வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பீலே 38 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
     ஐஎஸ்எல் போட்டியின் 10ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியும் மோதின. இதனைக் காண 61,237 ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.
     இது, நடப்புச் சாம்பியனான கொல்கத்தா தனது சொந்த மண்ணில் சந்திக்கும் முதல் ஆட்டம். பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில், தனது கோல் கணக்கை ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்திலேயே தொடங்கியது கொல்கத்தா அணி.
     அந்த அணியின் இயான் ஹியுமே அடித்த பந்தை கேரளா கோல் கீப்பர் சரியாகச் செயல்பட்டு தடுத்தார். எனினும், அவர் தடுத்த பந்தை தனது முதல் முயற்சியிலேயே மீண்டும் கோல் போஸ்டுக்கு உள்ளாகவே அடித்து அதை கோலாக்கினார் கொல்கத்தாவின் மற்றொரு வீரரான அராட்டா இஸுமி.
     எனினும், கேரளா அணியினருக்கு வாய்ப்புகளை வழங்காமல் சாதுர்யமாகச் செயல்பட்டனர் கொல்கத்தா அணியினர். இதனால் ஆட்டத்தின் இடைவேளையின்போது 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா அணி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் கொல்கத்தா அணியே தனது சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியது. கேரளா அணியினர் தங்களது முதல் கோலுக்காக போராடி வந்த நிலையில், கொல்கத்தா அணி தனது 2ஆவது கோலை அடித்தது. இந்த முறை அணியின் இயான் ஹியுமே ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் பாஸ் செய்து கொடுத்த பந்தை அட்டகாசமாக கோலாக்கினார் சக வீரர் ஜாவி லாரா.
     இதைத் தொடர்ந்து கேரளா அணியினர் ஆக்ரோஷத்துடன் கோல் அடிக்கும் முயற்சியில் இறங்கினர். அதற்குப் பலனாக ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கிரிஸ் டாக்னல் ஒரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து கேரளா அணியினர் மேற்கொண்ட பல்வேறு கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பெற்றது கொல்கத்தா அணி.
    இன்றைய ஆட்டம்
     எஃப்சி புணே சிட்டி
     தில்லி டைனமோஸ் எஃப்சி
     நேரம் : இரவு 7 மணி, இடம்: புணே
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai