Enable Javscript for better performance
தென் ஆப்பிரிக்காவுடனான 2ஆவது ஒரு நாள் போட்டி: தோனியின் விளாசலில் மீண்டு வென்றது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்காவுடனான 2ஆவது ஒரு நாள் போட்டி: தோனியின் விளாசலில் மீண்டு வென்றது இந்தியா

    By இந்தூர்,  |   Published on : 15th October 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    22

    தென் ஆப்பிரிக்காவுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோனி 92 ரன்கள் விளாச, 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
     முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இந்த முறை அதிர்ச்சி அளித்தார். கடந்த ஆட்டத்தில் 150 ரன்கள் விளாசிய ரோஹித், இந்த ஆட்டத்தில் 3 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா வீசிய பந்தில் க்ளீன் போல்டானார்.
     அவரைத் தொடர்ந்து ஷிகர் தவணும் 23 ரன்களில் வெளியேறினார். இதனால் தொடக்கத்திலேயே இந்தியா தடுமாறத் தொடங்கியது. மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ரஹாணே சற்று நம்பிக்கை அளித்தார்.
     நிதானாமாக ஆடிய அவர் அரை சதம் கடந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
     இந்த நிலையில், 51 ரன்கள் எடுத்திருந்த ரஹாணே இம்ரான் தாஹிரின் சுழலில் வீழ்ந்தார். இவ்வாறாக விக்கெட் வீழ்ச்சியுடன் தடுமாறி வந்த அணிக்கு தடுப்பணையாக வந்தார் தோனி.
     நீண்ட நாள்களுக்குப் பிறகு தோனி தனது நிலைத் தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம், ரெய்னா இந்த முறையும் தனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தார். 5 பந்துகளுக்கு ரன்கள் ஏதும் எடுக்காமல் அவர் டக் அவுட் ஆனார்.
     இந்நிலையில், நிதானமாக ஆடி வந்த தோனி அரை சதம் கடந்தார். அத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் சிறப்புடன் செயல்பட்டார். ரெய்னாவைத் தொடர்ந்து வந்த அக்ஸர் படேலும் (13), புவனேஷ்வர் குமாரும் (14) அணியின் இக்கட்டான சூழ்நிலைக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி பெவிலியன் திரும்பினர்.
     தொடர்ந்து வந்த ஹர்பஜன் சிங், தோனிக்கு தகுந்த இணையாக சிறிது நேரம் செயல்பட்டார். மொத்தம் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் அவர். அடுத்து வந்த யாதவ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
     இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. தோனி 92 ரன்களுடனும், மோகித் சர்மா ரன்கள் ஏதும் இன்றியும் களத்தில் இருந்தனர்.
     தென் ஆப்பிரிக்க அணி சார்பில், ஸ்டெயின் 3 விக்கெட்டுகளும், மோர்கெல், தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரபாடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
     தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸ்: அதைத் தொடர்ந்து 248 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி.
     தொடக்க ஆட்டக்காரரான ஆம்லாவை அக்ஸர் படேலும், தோனியும் சேர்ந்து 17 ரன்களில் வெளியேற்றினர். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் தீவிரமான கேட்ச் முயற்சி தவறியதால் டி காக் தொடர்ந்து ஆடும் வாய்ப்பை பெற்றார்.
     எனினும், அவர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக டு பிளெஸிஸ்-டுமினி இணை அணியின் வீக்கெட் சரிவுக்கு அணை போட்டது. நிதானமாக ஆடிய இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
     இப்படியாக தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 134ஐ எட்டியிருந்தபோது 36 ரன்கள் எடுத்திருந்த டுமினி விக்கெட்டை வீழ்த்தினார் அக்ஸர் படேல். இதனால் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறத் தொடங்கியது.
     இந்நிலையில், அரை சதம் கடந்திருந்த டு பிளெஸ்ஸிஸும் அடுத்த சில பந்துகளிலேயே வீழ்ந்தார். அடுத்த வந்த டி வில்லியர்ஸ் சற்று நிதானமாக ஆடினார். ஆனால் மறுபக்கத்தில் மில்லர் ரன்கள் ஏதும் இன்றி பெவிலியன் திரும்பினார்.
     பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ், 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கான வெற்றி வாய்ப்பு சற்றே மங்கத் தொடங்கியது. தொடர்ந்து வந்த வீரர்களும் அணியின் ரன்களை உயர்த்தப் போராடி வீழ்ந்தனர்.
     இறுதியாக, 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்பிரிக்க அணி. இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
     இந்திய அணி சார்பில், அக்ஸர் படேலும், புவனேஷ்வர் குமாரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹர்பஜன் 2 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ், மோகித் சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
     தற்போது, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சம நிலையில் உள்ளன. 
     19.jpg

    21.jpg 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai