சுடச்சுட

  

  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாகிர் கான்

  By புது தில்லி,  |   Published on : 16th October 2015 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  45

  இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜாகிர் கான்(37), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
   காயம் காரணமாக கடந்த 3-4 ஆண்டுகளாக அவதிப்பட்டது, ஃபார்மில் இல்லாதது போன்ற காரணங்களால் நீண்ட காலமாக அவர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஜாகிர் கான், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.
   இதுவரையில் அவர் விளையாடிய 92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளும், 200 ஒரு நாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளும், 17 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளும் அணிக்காக வீழ்த்தியுள்ளார்.
   டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜாகிர் கான் 4ஆவது இடத்தில் உள்ளார். தாம் பங்கேற்ற 92 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
   அவருக்கு முன்பாக முதலிடத்தில் அனில் கும்ப்ளேவும் (619), இரண்டாவது இடத்தில் கபில் தேவும் (434), மூன்றாவது இடத்தில் ஹர்பஜன் சிங்கும் (417) உள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இடம் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் மொத்தமாக அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
   தனது ஓய்வு அறிவிப்பின்போது ஜாகிர் கான் கூறியதாவது:
   கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக விளையாடியபோது பல்வேறு முக்கியமான வாய்ப்புகளைப் பெற்றேன். இக்கட்டான சூழ்நிலைகளில் பலர் எனக்கு ஆதரவாக இருந்தனர். பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
   எனது கிரிக்கெட் வாழ்க்கையில் உலகக் கோப்பை வென்றது மறக்க முடியாத மிகச் சிறந்த நினைவு. ஓய்வு அறிவிப்புக்கு முன்பாக, சச்சின் டெண்டுல்கர், அஜித் அகர்கர், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோரிடம் எனது முடிவைத் தெரிவித்தேன்.
   பிசிசிஐ, பரோடா கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட் சங்கம் என எனக்கு வாய்ப்பளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி.
   எனக்கு தகுந்த ஆதரவளித்து ஊக்கமளித்த ரசிகர்களுக்கும் நன்றி.
   அணியின் சக வீரர்கள் மிக நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர். அற்புதமான நினைவுகளுடன் வெளியேறுகிறேன் என்று ஜாகிர் கான் கூறினார்.
   இறுதியாக, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜாகிர் கான் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
  பிரபலங்கள் புகழாரம்
   ஓய்வு அறிவித்துள்ள ஜாகிர் கானுக்கு பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய கிரிக்கெட்டுக்கு ஜாகிர் கான் வழங்கிய பங்களிப்புக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
   அவரது எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
   - பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர்
   
   இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஜாகிர் கான் ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர். கடந்த ஆண்டுகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் தலைவராக அவர் திகழ்ந்தார். இந்தியாவின் பல்வேறு வெற்றிகளுக்கு அவர் காரணமாக இருந்துள்ளார்.
   - பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர்
   
   பதற்றம் இல்லாத பந்துவீச்சாளர்களில் ஜாகிர் கானும் ஒருவர். அவர் ஒரு சவாலாக இருந்தார். பல சமயங்களில் பேட்ஸ்மேன்களை அறிந்து பந்துவீசக் கூடியவர். அவரது புதிய வாழ்க்கைப் பாதை நன்றாக அமையும் என்று நம்புகிறேன்.
   - சச்சின் டெண்டுல்கர்
   ஜாகிர் கான் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
   அவர் இன்றி இந்திய அணியால் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்திருக்க இயலாது. இனியும் இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்கள் (ஜாகிர் கான்) பங்களிப்பு வழங்கலாம்.
   - தோனி
   
   ஓய்வு பெற்றுள்ள ஜாகிர் கான், இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளராகலாம் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமண் தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பந்துவீச்சில் ஜாகிர் கானுக்கு தகுந்த அறிவும், அனுபவமும் உள்ளதால், இன்றைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் மிகச் சிறந்த பயிற்சியாளராக செயல்பட முடியும்.
   - வி.வி.எஸ். லட்சுமண்
   
   "என்ன ஒரு அருமையான பந்து வீச்சாளர் ஜாகிர் கான்? எனது சகோதரர் போன்ற அவரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உன்னை விரும்புகிறேன் ஜாகி.....'
   - ஹர்பஜன் சிங்
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai