சுடச்சுட

  

  ஹெராத் 10 விக்கெட்டுகள்: முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் வெற்றி

  By காலே  |   Published on : 18th October 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  srilanga

  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கணா ஹெராத் அபாரமாக பந்துவீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்ற, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

  இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி காலேவில் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது.

  டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 484 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 251 ரன்கள் எடுத்து "பாலோ-ஆன்' ஆனது.

  தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், கடந்த வெள்ளிக்கிழமை (3-ஆம் நாள்) ஆட்டநேர முடிவில் 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. டேரன் பிராவோ 20 ரன்களுடனும், தேவேந்திரா பிஷு 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  சனிக்கிழமை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பிஷு கூடுதலாக 4 ரன்கள் மட்டும் சேர்த்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். மறுமுனையில் நின்ற பிராவோவும் (31 ரன்கள்) நிலைக்கவில்லை.

  நடுவரிசையில் களமிறங்கிய ஜெர்மைன் பிளாக்வுட் மட்டும் நிதானமாக விளையாடி 92 ரன்கள் (135 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்தார்.

  மறுபுறம் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 68.3 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  இதன் மூலம் ஒரு நாள் முன்னதாகவே முடிவுக்கு வந்த இப்போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அபாரமாக பந்துவீசிய மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரங்கணா ஹெராத், முதல் இன்னிங்ஸில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளும், 2-ஆவது இன்னிங்ஸில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும் என இப்போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை அள்ளினார்.

  ஆட்டநாயகன் விருது பெற்ற அவர், ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றுவது இது 5-ஆவது முறையாகும். 37 வயதான ஹெராத், இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 288 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

  டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3-ஆவது இலங்கை வீரர் என்ற சிறப்பைப் பெற அவருக்கு இன்னும் 12 விக்கெட்டுகளே தேவை. இவ்விரு அணிகளிடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai