Enable Javscript for better performance
ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இரு அணிகள்: சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2018இல் மீண்டும் இடம்பெறுகின்றன- Dinamani

சுடச்சுட

  

  ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இரு அணிகள்: சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2018இல் மீண்டும் இடம்பெறுகின்றன

  By  மும்பை,  |   Published on : 19th October 2015 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  29

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிதாக இரு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. சூதாட்ட புகாரில் 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள் வரும் 2018 ஆம் ஆண்டு முதல் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளது.
   இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த அதன் செயற்குழு கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர், செயலர் அனுராக் தாக்குர், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அனிருத் சௌத்ரி, மேற்குவங்க கிரிக்கெட் சங்க தலைவர் சௌரவ் கங்குலி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிசிசிஐ-யின் புதிய தலைவராக சஷாங் மனோகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.
   புதிதாக இரு அணிகள்: கடந்த 2013ஆம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது நடந்த சூதாட்டம் தொடர்பாக நீதிபதி ஆர்.எம்.லோதா குழுவினரின் பரிந்துரையின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளை 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
   இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை சேர்ப்பதா? அவ்வாறு சேர்த்தால், 2 ஆண்டு தடை முடிந்த பின்னர் அதாவது வரும் 2018ஆம் ஆண்டில் சென்னை, ராஜஸ்தான் அணிகளை மீண்டும் போட்டியில் சேர்த்துக் கொள்ளும்பட்சத்தில் அணிகளின் எண்ணிக்கை 8லிருந்து 10 ஆக உயரும். எனவே இவ்விவகாரத்தில் எத்தகைய முடிவை எடுக்கலாம் என்பது குறித்து ராஜீவ் சுக்லா தலைமையிலான பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி தங்களது அறிக்கையை பிசிசிஐ-யிடம் சமர்ப்பித்திருந்தனர்.
   இந்த விவகாரம் மற்றும் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து பெப்சி நிறுவனத்தின் விலகல் முடிவு, பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
   கூட்டத்துக்குப் பின்னர் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "நீதிபதி லோதா குழுவினரின் இடைக்கால அறிக்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
   சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வரும் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் தடைசெய்யப்பட்ட இரு அணிகளுக்குப் பதிலாக புதிதாக 2 அணிகளுக்கான ஏலம் விடப்படும்.
   ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் உரிமை விவோ செல்லிடப்பேசி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாள்களுக்குள் அந்த நிறுவனம் வங்கி உத்தரவாதத்தை அளிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   2 ஆண்டுகளுக்கு மட்டும்: சூதாட்டப் புகார்கள் கிளம்பியதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியின் புகழ் சீர்குலைந்துள்ளதாகவும், இதனால் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாகவும் பெப்சி நிறுவனம் முன்னதாக பிசிசிஐயிடம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து சீனாவை சேர்ந்த விவோ செல்லிடப்பேசி நிறுவனம் புதிய ஸ்பான்சராக பிசிசிஐ-யுடன் இணைந்துள்ளது.
   2 ஆண்டு தடை நீங்கிய பிறகு சென்னை, ராஜஸ்தான் அணிகளை மீண்டும் போட்டியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ-யில் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புவதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
   ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   தற்போதைய சூழலில் தடைசெய்யப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் புதிதாக இரு அணிகள் ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்படும். அணிகளின் அடிப்படை விலை, மதிப்பு ஆகியவை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
   புதிய அணிகள் சென்னை மற்றும் ஜெய்ப்பூரை பிரதானமாக கொண்டு தேர்வு செய்யப்படுமா என்று கேட்கிறீர்கள். எந்த நகரமானாலும் அதிக விலை கோருபவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.
   வரும் நவம்பர் 10ஆம் தேதி பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
   இதில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் மற்றும் இதர விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்கிடையே இரு நாடுகளிடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கானுக்கு பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் அழைப்பு விடுத்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai