சுடச்சுட

  

  கடைசி நேரத்தில் ரிச்சர்ட் காட்ஜீ கோல்: கேரளத்தை வீழ்த்தியது தில்லி டைனமோஸ்

  By  கொச்சி,  |   Published on : 19th October 2015 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  31

  இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ரிச்சர்ட் காட்ஜீ கடைசி நேரத்தில் கோல் அடித்து உதவ, தில்லி டைனமோஸ் எஃப்சி கேரளத்தை வீழ்த்தியது.
   ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி - தில்லி டைனமோஸ் எஃப்சி அணிகள் மோதின. ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்திலேயே தில்லி அணி பரபரப்பை ஏற்படுத்தியது.
   முன்கள வீரர் ராபின்சிங் தட்டிய பந்தை, கேரள அணியின் கோல்கீப்பர் ஸ்டீபன் பைவாட்டர் அபாரமாக தடுத்தார். இதேபோல 5-ஆவது நிமிடத்தில் தில்லி அணியின் மற்றொரு முயற்சியையும் எதிரணி முறியடித்தது.
   தாஸ் சந்தோஷ் இலக்கை நோக்கி வேகமாக உதைத்த பந்தை இந்த முறையும் கோல் கீப்பர் ஸ்டீபன் தடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கேரள அணியின் கேப்டனும் தடுப்பாட்டக்காரருமான பீட்டர் ராமேஜ் தில்லி வீரர்களுக்கு சவாலாக விளங்கினார்.
   முதல் பாதியில் தில்லி அணிக்கே அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை அந்த அணி வீரர்கள் கோலாக மாற்ற தவறிவிட்டனர். 43-ஆவது நிமிடத்தில் ராபின்சிங்குக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்பொழுதும் உள்ளூர் அணியின் கோல்கீப்பர் அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் முதல் பாதி கோல் இன்றி சமநிலையில் இருந்தது.
   தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் 67 ஆவது நிமிடத்தில் ராபின்சிங் மீண்டும் ஒரு கோல் முயற்சியை தவறவிட்டார். அப்பொழுது அவர் அடித்த ஷாட் கம்பத்துக்கு மேலே சென்றுவிட்டது.
   அடுத்தடுத்து வரிசையாக வாய்ப்புகளை தவறவிட்ட தில்லி அணிக்கு 87 ஆவது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. வலது ஓரத்தில் இருந்து கிடைத்த பாûஸ முன்கள வீரர் ரிச்சர்ட் காட்ஜீ, தலையால் முட்டி கோல் வலைக்குள் திருப்பினார். இந்த முறை ஸ்டீபன் பைவாட்டரால் அதனை தடுக்க இயலவில்லை. இதனால் கடைசி நேரத்தில் தில்லி அணி முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கூடுதல் கோல் எதுவும் பதிவாகவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் தில்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்ற தில்லி டைனமோஸ், 9 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது. கேரள பிளாஸ்டர்ஸ் அணி, 4 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது. ஐஎஸ்எல் தொடரில் திங்கள்கிழமை ஓய்வு நாளாகும்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai