சுடச்சுட

    

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா மீண்டும் தோல்வி

    By ராஜ்கோட்,  |   Published on : 19th October 2015 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
     இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
     இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்குப் பதிலாக அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
     டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் மில்லரும் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக்கும் களமிறங்கினர்.
     இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த தொடக்க ஜோடி, அவ்வப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பந்தை எல்லைக் கோட்டுக்கு விரட்டியது. 9-ஆவது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 50 ரன்களை எட்டியது.
     தொடர்ந்து விளையாடிய டி காக் - மில்லர் ஜோடியை 14-ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங் பிரித்தார்.
     அவரது ஓவரில் மில்லர் (33 ரன்கள், 41 பந்து, 4 பவுண்டரி) அடித்த பந்தை ரஹானே கேட்ச் செய்தார்.
     டி காக் சதம்: அடுத்து வந்த ஹஷிம் ஆம்லா 5 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸின் உதவியோடு டி காக் தனது அரை சதத்தை பதிவு செய்தார். 3-ஆவது விக்கெட்டுக்கு கைகோத்த டி காக் - டுபிளெஸ்ஸிஸ் ஜோடி 118 ரன்கள் சேர்த்தது.
     ஒரு நாள் போட்டியில் தனது 19-ஆவது அரை சதத்தை விளாசிய டு பிளெஸ்ஸிஸ் 60 ரன்கள் (63 பந்து, 6 பவுண்டரி) எடுத்த நிலையில் மோஹித் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தனது 50-ஆவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற டி காக் அபாரமாக விளையாடி, 9-ஆவது சதத்தை விளாசினார்.
     ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் ரன் அவுட்டானார். 118 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட மொத்தம் 103 ரன்கள் சேர்த்து டி காக் வெளியேறினார்.
     தென் ஆப்பிரிக்கா-270: இதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.
     இந்திய அணி தரப்பில் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஷிகர் தவண் 13 ரன்களில் வெளியேறினார்.
     அதன் பின்னர் கைகோர்த்த ரோஹித் சர்மா (65 ரன்கள்), விராட் கோலி (77 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
     ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கேப்டன் தோனி 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். முதல் நிலை பேட்ஸ்மேன்கள் அனைவரும் கணிசமாக ரன் குவித்திருந்தாலும், அணியின் ரன்ரேட்டைத் தக்கவைக்கத் தவறிவிட்டனர்.
     இதன் காரணமாக பந்துகளைவிட அதிகமாக ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகமான நிலையில், ஆட்டம் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக மாறியது.
     ஆட்ட முடிவில் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியா தோல்வியைத் தழுவியது.
     4 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் மோர்ன் மோர்கெல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
     இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி சென்னையில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
     26.jpg

    27.jpg 

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai