சுடச்சுட

    

    இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி இல்லை: பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர்

    By DN  |   Published on : 20th October 2015 05:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடைசியாக 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு நாட்டு அணி மற்றொரு நாட்டில் சென்று ஆடும் போட்டித்தொடர் நடைபெறவில்லை. இருப்பினும், மூன்றாவது நாடு ஒன்றில், ஐசிசி ஒருங்கிணைக்கும் போட்டிகளில் மட்டும் இரு நாட்டு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளன.

    ஆனால், அண்மைக்காலமாக இந்திய எல்லையில் போர்நிறுத்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இரு நாடுகளிடையிலான உறவு சுமுகமாக இல்லாததால் திட்டமிட்டபடி போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆர்வம் காட்டவில்லை. இந்திய அரசு சம்மதித்தால் மட்டுமே இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியும் என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதற்கிடையே போட்டியை நடத்த சம்மதிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ-யிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

    இந்நிலையில் பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சஷாங்க் மனோகர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதற்காக சஹாரியார் கானும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல் அதிகாரி நஜீம் சேத்தியும் இந்தியா வந்திருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ அலுவலகத்தை சிவசேனைக் கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது, சஷாங்க் மனோகரின் இருக்கைக்கு முன்பாக சென்று, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டோம்  என்று கோஷங்களை எழுப்பி, ரகளையில் ஈடுபட்டனர்.

    சிவசேனைக் கட்சியினரின் ரகளையைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பற்றிய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பிசிசிஐ அமைப்பின் மூத்த நிர்வாகியும், ஐபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லாவை சஹாரியார் கான் டெல்லியில் சந்தித்து பேசினார்.

    இந்தச் சந்திப்பு குறித்து சஹாரியார் கான் கூறும்போது:

    பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகருடன் எந்தச் சந்திப்பும் நடைபெறவில்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்காது. இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர் நடக்க வாய்ப்பு இல்லாததால் நாடு திரும்புகிறேன் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai