சுடச்சுட

    
    20spt

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 14 மாதங்களுக்குப் பின்னர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

    இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி-20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.

    தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டி தொடரிலும் அந்த அணியே 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி 2 ஒரு நாள் போட்டி மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் விவரத்தை பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு கூட்டம், தேர்வுக் குழு உறுப்பினர் சந்தீப் பாட்டீல் தலைமையில் புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பிசிசிஐ செயலர் அனுராக் தாக்குர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதில், 26 வயதான ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 14 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாடினார். அண்மையில் ரஞ்சி கிரிக்கெட்டில் சௌராஷ்டிர அணிக்காக விளையாடிய ஜடேஜா, 24 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கணிந்துள்ளது.

    காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத அஷ்வின், இலங்கை தொடரில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா ஆகியோரின் பெயர்களும் டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் பட்டியலில் உள்ளது.

    ஆக்ரோஷமாக விளையாடி வீரர்களுடன் மோதல் போக்கைக் கடைபிடித்ததால் இஷாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது.

    இதன்படி மொஹாலியில் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் பங்கேற்க இயலாது. மற்றபடி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய வீரர்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    அதேபோல கடைசி 2 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் கழற்றிவிடப்பட்டு அவருக்குப் பதிலாக ஸ்ரீநாத் அரவிந்த் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    கடைசி 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி

    மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அஜிங்கியா ரஹானே, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அக்ஷர் படேல், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, மோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார், ஸ்ரீநாத் அரவிந்த், ஸ்டூவர்ட் பின்னி, அம்பாதி ராயுடு, குர்கீரத் மான்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி

    விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்,

    கே.எல்.ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், இஷாந்த் சர்மா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai