சுடச்சுட

    

    பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாற்றம்: சுரேஷ் ரெய்னாவுக்கு தோனி அறிவுரை

    By DN  |   Published on : 20th October 2015 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20spt5

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தடுமாறி வரும் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவுரை கூறியுள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஒரு நாள் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.

    இந்தத் தொடரில் இடதுகை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, கடைசி இரண்டு ஆட்டங்களில் டக்அவுட்டும், முதல் போட்டியில் 3 ரன்களும் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக முடிவடைந்த டி-20 தொடரிலும் அவர் போதிய அளவு அணிக்கு கைகொடுக்கவில்லை. ரெய்னா விரைவில் விக்கெட்டை இழந்தது வருவது இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

    ரெய்னாவுக்கு அறிவுரை: 3-ஆவது ஒரு நாள் போட்டி முடிந்த பின்னர் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியதாவது: சுரேஷ் ரெய்னா, எடுத்தவுடனே அடித்து ஆடுவதற்கு பதிலாக அவர் சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ரெய்னா தனக்கென அவகாசம் எடுத்துக்கொண்டு விளையாடினால் பின்னர் எல்லாமே சிறப்பாக இருக்கும். ஸ்ட்ரைட் திசையில் பெரிய ஷாட்டுகளை அடிப்பது எளிதான விஷயமல்ல.

    தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கின்போது விக்கெட்டுகள் அவ்வளவு எளிதில் விழவில்லை. இருப்பினும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். நாங்கள் பேட் செய்யும்போது ஆடுகளம் மெதுவான தன்மைக்கு மாறியது. அதனால் பெரிய ஷாட்டுகளை அடிக்க இயலவில்லை. குறிப்பாக 30 முதல் 40 ஓவர்கள் வரை இந்த சூழலே இருந்தது. இருப்பினும் 37-ஆவது ஓவரிலிருந்து நாங்கள் அடித்து ஆட தொடங்கினோம்.

    இந்த முறை நான் மேல்வரிசையில் களமிறங்க விரும்பினேன். அதேநேரத்தில் பின்வரிசையில் யார் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார் தோனி.

    மோர்கெல் காயம்: தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், "ஆறு ஓவர்கள் பந்து

    வீசிய பின்னர் மோர்ன் மோர்கெல் தனது காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் கூறினார். இருப்பினும் அவரது பந்துவீச்சு நன்றாக இருந்ததால் கடைசி வரை அவருக்கு வாய்ப்பளித்தேன்' என்றார்.

    இந்த ஆட்டத்தில் மோர்கெல் 10 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் விராட் கோலி, ரஹானே ஆகியோரின் விக்கெட்டுகளும் அடங்கும். இந்நிலையில் 4-ஆவது ஒரு நாள் போட்டியில் மோர்கெல் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai