Enable Javscript for better performance
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் வீரேந்திர சேவாக்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் வீரேந்திர சேவாக்

    By DN  |   Published on : 21st October 2015 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sp1

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் (37) சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

    தனது 37ஆவது பிறந்த நாளன்று (அக்டோபர் 20) அவர் இந்த ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.

    முன்னதாக, 2016ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் சாம்பியன் லீக் போட்டியில் விளையாட உள்ளதாக அறிவித்த சேவாக், அதன் மூலம் தனது ஓய்வு குறித்து பூடகமாக தெரிவித்திருந்தார். ஏனெனில், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே மாஸ்டர்ஸ் சாம்பியன் லீக் போட்டிகளில் விளையாட இயலும்.

    இந்நிலையில், தனது பிறந்த நாளான வியாழக்கிழமை அன்று ஓய்வு முடிவை அறிவித்து அவர் கூறியதாவது:

    எனக்கு எது சரியென்று தோன்றியதோ அதையே எப்போதும் எனது வாழ்க்கையிலும், கிரிக்கெட் களத்திலும் செய்து வந்துள்ளேன். எனது 37ஆவது பிறந்த நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதென கடந்த சிறிது காலத்துக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன்.

    எனவே, இன்று (அக்டோபர் 20) எனது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.

    கிரிக்கெட் எனது வாழ்க்கையாக இருந்து வந்தது. இனியும் அது அவ்வாறாகவே தொடரும். இந்தியாவுக்காக விளையாடியதென்பது மறக்க முடியாத பயணம். அத்துடன், எனது அணியின் சக வீரர்களும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதை நினைவில் கொள்ளும் வகையில் முயற்சிகளும் மேற்கொண்டேன். அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் நம்புகிறேன்.

    முதல் முறையாக 300 ரன்கள் அடித்தது, உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தது போன்றவை மகிழ்ச்சிகரமான நினைவுகள். சச்சின், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் போன்றவர்களே எனக்கு முன்னுதாரணமாக இருந்தனர்.

    இந்த சூழ்நிலையில், எனது சக வீரர்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்த கேப்டன்களுக்கும், எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்தில் என்னுடன் இருந்த எனது தந்தையை தற்போது நினைவு கூருகிறேன். அத்துடன் எனது பயிற்சியாளர் ஏ.என்.சர்மாவுக்கு நன்றி கூறுகிறேன். தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கும், எனக்கு ஆதரவளித்ததற்காக அருண் ஜேட்லிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சேவாக் கூறினார்.

    கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய சேவாக், இறுதியாக 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

    முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் சேவாக் ஆவார். முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் 319 ரன்கள் குவித்தார். அத்துடன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் குவித்து இரட்டை முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் பயணித்த சேவாக், இந்திய அணிக்காக இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 8,586 ரன்கள் குவித்துள்ளார். அதில் 23 சதங்களும், 32 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி 49.34 ரன்கள்.

    ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்த வரையில் 251 ஆட்டங்களில் கலந்துகொண்ட சேவாக், 8,273 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 சதங்களும், 38 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டியில் இவரது சராசரி 35.05 ரன்கள்.

    இதுதவிர, மொத்தம் 19 டி20 போட்டிகளில் விளையாடிய சேவாக், 2 அரை சதங்களுடன் 394 ரன்கள் எடுத்துள்ளார். தோனி தலைமையில் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை வென்ற அணியிலும் சேவாக் இடம் பெற்றிருந்தார்.

    பந்துவீச்சு: ஆஃப் ஸ்பின்னரான சேவாக் டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல்: ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்த வரையில் கடந்த 2008 முதல் 2013 வரையில் தில்லி டேர்டெவில்ஸ் அணியிலும், 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

     

    பிரபலங்கள் புகழாரம்

    spt.jpg 

    பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர்: தனது நீண்ட கால கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார் சேவாக். ஒரு தனித்துவமான பேட்டிங்கின் மூலம் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்தவர்.

    பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர்: வீரேந்திர சேவாக் இந்தியாவுக்கான விவ் ரிச்சர்ட்ஸ். பந்துவீச்சுத் தாக்குதல்களை பிரிந்தெறிந்தவர். அவரது எதிர்காலம் நலமுடன் அமைய வாழ்த்துக்கள்.

    தோனி: விவ் ரிச்சர்ட்ஸின் பேட்டிங்கைப் பார்த்தது இல்லை. ஆனால், சேவாக்கின் பேட்டிங்கை பார்த்திருக்கிறேன் என்று என்னால் பெருமையாக கூற முடியும். அவர் எப்போதும் ஒரு ரன் மீது அல்ல, பவுண்டரிகள் மீதே குறியாக இருந்தவர். உங்களைப் (சேவாக்) போல் பேட்டிங் செய்ய பலர் முயற்சிப்பர்.

    கோலி: உங்களுடன் கிரிக்கெட் விளையாடியதில் மகிழ்ச்சில் சேவாக். என்ன ஒரு வியக்கத்தக்க விளையாட்டு உங்களுடையது (சேவாக்)? உங்களது வழிகாட்டுதலுக்கும், நினைவுகளுக்கும் நன்றிகள்.

    தவண்: ஒரு உண்மையான தொடக்க ஆட்டக்காரர். எதிர்காலப் பயணம் உங்களுக்கு (சேவாக்) சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai