சுடச்சுட

    

    சென்னை ஒருநாள் போட்டி: இந்தியா 299 ரன்கள் குவிப்பு! விராட் கோலி அபார சதம்!

    By DN  |   Published on : 22nd October 2015 05:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kohlicent1

    இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது தென் ஆப்பிரிக்க அணி.

    சென்னையில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. தென் ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றங்கள். மார்கல், டுமினிக்குப் பதிலாக ஆரோன் பங்கிசோ, கிரிஸ் மாரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

    இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிவரும் ரோஹித் சர்மா, 4 பவுண்டரிகள் அடித்த வேகத்தில் 21 ரன்களில் அவுட் ஆனார். இந்தப் போட்டியிலும் தவான் சரியாக ஆடவில்லை. அவர் 7 ரன்களில் ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலியுடன் இணைந்து பொறுப்புடன் ஆடிய ரஹானே, 45 ரன்களில் அவுட் ஆனார். இன்று 5-வதாகக் களமிறங்கினார் ரெய்னா.

    இன்று கோலி மிகவும் சுறுசுறுப்பாக ஆடினார். நிறைய சிங்கிள்ஸ் எடுத்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார். பலமுறை அவர் ரன் அவுட் ஆகவேண்டியது. இறுதியில் 112 பந்துகளில் சதம் எடுத்தார். ஷேவாக் பாணியில் சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 23-வது சதமாகும்.

    முந்தைய இரு போட்டிகளில் டக் அவுட் ஆன ரெய்னா, இன்று கவனமாக ஆடினார். அவர் 48 பந்துகளில் அரை சதம் எடுத்தார். 53 ரன்களில் ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதம் அடித்தபிறகு கோலி மிகவும் சோர்வடைந்தார். ஆனாலும் தோனியுடன் இணைந்து ரன்கள் எடுத்து வந்தார். இறுதியில் 138 ரன்களில் ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஹர்பஜன் சிங், முதல் பந்திலேயே போல்ட் ஆனார். தோனி கடைசி ஓவரில் 15 ரன்களில் அவுட் ஆனார்.

    50 ஓவர்களில் இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்களை மட்டுமே எடுத்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai