சுடச்சுட

    

    7 மாதங்களுக்குப் பின்னர் விராட் கோலி சதம்:4-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

    By சென்னை  |   Published on : 23rd October 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் விளாச, 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 7 மாதங்களுக்குப் பின்னர் அடித்துள்ள சதம் இதுவாகும். அதேநேரத்தில் எதிரணி கேப்டன் டி வில்லியர்ஸ், சதம் அடித்தும் அது, தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு உதவவில்லை.

    இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் மற்றும் 3-ஆவது போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 2-ஆவது போட்டியில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் தொடரை எதிரணியிடம் இழக்காமல் இருக்க 4-ஆவது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எதிரணியில் காயமடைந்த மோர்ன் மோர்கெல், ஜே.பி.டுமினி ஆகியோருக்குப் பதிலாக ஆரோன் பங்கிசோ, கிறிஸ் மோரீஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.

    கோலி சதம்: இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இந்த முறை சோபிக்கத் தவறிவிட்டனர். ரோஹித் சர்மா 21 ரன்னிலும், ஷிகர் தவண் 7 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - அஜிங்கியா ரஹானே ஜோடி நிதானமாக ஆடி ரன்குவிப்பைத் தொடங்கியது.

    முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கோலி சற்று அதிரடியாக விளையாடினார். 3-ஆவது விக்கெட்டுக்கு கைகோத்த கோலி - ரஹானே ஜோடி கூட்டாக 104 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது.

    ஸ்டெயின் வீசிய 27-ஆவது ஓவரில் ரஹானே (45 ரன்கள், 53 பந்து, 4 பவுண்டரி) அடித்த பந்தை டி காக் கேட்ச் செய்தார். இதற்கிடையே அரை சதம் கடந்து முன்னேறிக் கொண்டிருந்த கோலிக்கு, சுரேஷ் ரெய்னா சிறப்பாக கைகொடுத்தார்.

    கடந்த ஆட்டங்களில் ஜொலிக்கத் தவறிய அவர், இந்த முறை ஃபார்முக்கு திரும்பினார். பங்கிசோ வீசிய 38-ஆவது ஓவரில் "லாங்-ஆன்' திசையில் சிக்ஸர் விளாசி தனது 23-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார் கோலி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் பதிவு செய்யும் முதல் சதம் இதுவாகும்.

    கோலி, 7 மாதங்களுக்குப் பின்னர் ஒரு நாள் போட்டியில் சதமடித்துள்ளார். அவர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசினார்.

    ரெய்னா 53 ரன்கள்: தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவும் அரை சதத்தை எட்டினார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். ரெய்னா, 52 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட மொத்தம் 53 ரன்களுடன் வெளியேறினார். 4-ஆவது விக்கெட்டுக்கு கோலி - ரெய்னா ஜோடி 127 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    அவரைத் தொடர்ந்து விராட் கோலி (138 ரன்கள், 140 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்ஸர்), ஹர்பஜன் சிங் (0), கேப்டன் தோனி (15) ஆகியோரின் விக்கெட்டுகள் வேகமாக விழுந்தன. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் மந்தமானது. கடைசி 30 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் எடுக்கப்பட்டது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. அக்ஷர் படேல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். எதிரணி தரப்பில் ஸ்டெயின், ரபடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் பின்னர், ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஹஷிம் ஆம்லா 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய குவின்டன் டி காக் ஆரம்பத்தில் சிறிது அதிரடி காட்டினார். இருப்பினும், ஹர்பஜன் வீசிய 12-ஆவது ஓவரில் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அடித்த பந்தை ரஹானே கேட்ச் செய்தார். அடுத்து வந்த டு பிளெஸ்ஸிஸ் 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

    டி வில்லியர்ஸ் சதம்: இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் டி வில்லியர்ஸ், பெஹர்டியனுடன் இணைந்து விக்கெட் சரிவை தடுத்ததோடு ரன்குவிப்பிலும் கவனம் செலுத்தினார். ஒரு புறம் டி வில்லியர்ஸ் தனியாளாக போராட, மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையே மிஸ்ரா வீசிய 43-ஆவது ஓவரில் சிக்ஸர் விளாசி தனது 22-ஆவது ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார் டி வில்லியர்ஸ்.

    அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் அடித்த பந்தை தோனி கேட்ச் செய்தார். 107 பந்துகளை எதிர்கொண்ட டி வில்லியர்ஸ், 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 112 ரன்களுடன் வெளியேறினார். இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கை தகர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ககிசோ ரபடா 8 ரன்களுடனும், இம்ரான் தாஹிர் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்திய அணி, 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலை பெற்றது.

    விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வானார். கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மும்பையில் வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

    கங்குலியின் சாதனையை கடந்தார் கோலி...

    இந்த ஆட்டத்தின் மூலம் ஒரு நாள் போட்டியில் தனது 23-ஆவது சதத்தை விளாசிய விராட்கோலி, டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் இணைந்தார்.

    மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலியின் சாதனையையும் அவர் முறியடித்தார். 311 ஆட்டங்களில் விளையாடிய கங்குலி, 22 சதங்கள் விளாசியுள்ளார். இதனை 165-ஆவது போட்டியிலேயே கோலி கடந்துள்ளார். மேலும், ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்தியர்களின் வரிசையில் டெண்டுல்கருக்கு (49 சதம், 463 ஆட்டம்), அடுத்ததாக கோலி 2-ஆவது இடத்தில் உள்ளார்.

     

    2-ஆவது வீரர் டி வில்லியர்ஸ்...

    இப்போட்டியில் தனது 22-ஆவது சதத்தை விளாசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ், 194 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று மொத்தம் 8,284 ரன்கள் எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்காக ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் ஜாக்குவிஸ் காலீஸுக்கு (328 ஆட்டம், 11,579 ரன்கள்) அடுத்ததாக டி வில்லியர்ஸ் 2-ஆவது இடத்தில்உள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai