சுடச்சுட

    
    31

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசனை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
     சென்னையில் உள்ள சீனிவாசனின் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சுமார் 45 நிமிடங்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் அவரது இல்லத்தில் காலை உணவு அருந்திவிட்டு தோனி அங்கிருந்து புறப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தோனி எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். தோனி சென்ற பின்னர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் சீனிவாசனை சந்தித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பான வழக்கில் நீதிபதி லோதா குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. மேலும் இரு அணிகளின் உரிமையாளர்களுக்கும் ஆயுள்காலத் தடை விதித்தது. இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் உரிமையாளரும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சீனிவாசனை தோனி சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     இந்நிலையில், ஐபிஎல் சூதாட்ட வழக்கைத் தொடர்ந்தவரும், பிஹார் கிரிக்கெட் சங்க செயலாளருமான ஆதித்யா வர்மா, தோனிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "சீனிவாசனின் இல்லத்துக்கு நீங்கள் உணவருந்தச் சென்ற விஷயம் குறித்து கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன். தனிப்பட்ட முறையில் அங்கு செல்வதில் எந்தத் தடையுமில்லை. ஆனால், இந்திய அணியின் கேப்டனாக நீங்கள் சீனிவாசனின் இல்லத்துக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே சென்னை அணியில் குருநாத் மெய்யப்பனின் பங்கு குறித்து நீதிபதி முத்கல் குழுவினரிடம் நீங்கள் அளித்த கடிதம் விமர்சனத்துக்குள்ளானது' என்று கூறியுள்ளார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai