சுடச்சுட

  

  ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா: டி காக், டு பிளெஸ்ஸிஸ், டி வில்லியர்ஸ் சதம்; 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

  By மும்பை,  |   Published on : 26th October 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  17

  இந்தியாவுடனான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டி காக், டு பிளெஸ்ஸிஸ், டி வில்லியர்ஸ் ஆகியோர் சதம் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு, 3-2 என்ற கணக்கில் இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
   இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
   குவின்டன் டி காக்கும், ஹஷிம் ஆம்லாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்திலேயே ஆம்லா, 5 பவுண்டரிகள் விரட்டி அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். மோஹித் சர்மா அகலமாக வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டுவதற்காக ஆம்லா (23 ரன்கள், 13 பந்து) பேட்டை சுழற்ற, அது தோனியின் கைகளில் தஞ்சமடைந்தது. ஆம்லா வெளியேறினாலும், அடுத்து வந்த டு பிளெஸ்ஸிஸின் உதவியுடன் டி காக் அதிரடியை தொடர்ந்தார்.
   டி காக் சதம்: மோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சை இருவரும் அடித்து நெருக்கியதால் 6-ஆது ஓவரில் ஹர்பஜன் சிங்குக்கு பந்துவீச வாய்ப்பளித்தார் தோனி. அவரும் ஓரளவுக்கு ரன்களை கட்டுப்படுத்தும் விதமாக பந்துவீசினார்.
   ஆனால், மற்றொருபுறம் அக்ஷர் படேலும், அமித் மிஸ்ராவும் ரன்களை வாரி இறைத்தனர். 58 ரன்கள் எடுத்திருந்தபோது டி காக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோஹித் சர்மா தவறவிட்டார். இதேபோல டு பிளெஸ்ஸிஸ் 43 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை, "ஷார்ட் மிட் விக்கெட்' திசையில் நின்ற ரஹானே
   நழுவவிட்டார்.
   தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி காக், தனது 8-ஆவது சதத்தை விளாசினார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் 2-ஆவது சதம் இதுவாகும். இருப்பினும் ரெய்னா வீசிய 27-ஆவது ஓவரில் அவர் அடித்த பந்தை "லாங் ஆஃப்' திசையில் நின்றிருந்த விராட் கோலி கேட்ச் செய்தார். டி காக், 87 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 109 ரன்களுடன் வெளியேறினார். டி காக் - டு பிளெஸ்ஸிஸ் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 137 பந்துகளில் 154 ரன்கள் திரட்டினர்.
   சிக்ஸர் மழை: அடுத்து வந்த அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ், டு பிளெஸ்ஸிஸுடன் கைகோத்தார். இருவரும் இணைந்து இந்திய பந்துவீச்சாளர்களை மிரள வைத்தனர். டு பிளெஸ்ஸிஸ் 85 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் ஒரு கேட்ச் கண்டத்திலிருந்து தப்பித்தார். 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 2 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்திருந்தது. இதன்
   பின்னர் டி வில்லியர்ஸும், டு பிளெஸ்ஸிஸும் சிக்ஸர் மழை பொழிந்தனர்.
   இதனால் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 144 ரன்கள் சேர்த்தனர். முன்னதாக தனது சதத்தை பதிவு செய்த டு பிளெஸ்ஸிஸ், அக்ஷர் படேலின் 44-ஆவது ஓவரில் 3 சிக்ஸர் விளாசி குதூகலப்படுத்தினார்.
   அந்த ஓவரில் ஒரு பந்தை மண்டியிட்டு அடித்தபோது டு பிளெஸ்ஸிஸுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் குப்புற விழுந்த அவருக்கு இந்திய கேப்டன் தோனி ஓடி வந்து கால்களை இழுத்துவிட்டு உதவினார். இதன் பின்னர் சிறிது நேரம் அதிரடியாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ், 44-ஆவது ஓவரின் முடிவில் சிகிச்சைக்காக வெளியேறினார்.
   அவர் 115 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 133 ரன்கள் எடுத்தார். 3-ஆவது விக்கெட்டுக்கு டு பிளெஸ்ஸிஸ் - டி வில்லியர்ஸ் ஜோடி 103 பந்துகளில் 164 ரன்கள் குவித்தது.
   டி வில்லியர்ஸ்-119: இதன் பின்னர் வந்த மில்லரின் உதவியோடு அதிரடி மன்னன் டி வில்லியர்ஸும் சதமடித்தார். புவனேஷ்வர் குமார் வீசிய 47-ஆவது ஓவரில் டி வில்லியர்ஸ் (119 ரன்கள், 61 பந்து, 3 பவுண்டரி, 11 சிக்ஸர்) அடித்த பந்தை கேப்டன் தோனி கேட்ச் செய்தார்.
   முதல் ஸ்பெல்லில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் கடைசி நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். இருப்பினும் அவரது கடைசி ஓவரில் பெஹர்டியன் (16 ரன்கள்) ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 4 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் குவித்தது. மில்லர் 22 ரன்களுடனும், டீன் எல்கர் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
   இந்திய தரப்பில் புவனேஷ்வர் 10 ஓவர்கள் பந்துவீசி, அதிகபட்சமாக 104 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஹர்பஜன், மோஹித், ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
   இந்தியா தோல்வி: இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 16 ரன்களுடனும், விராட் கோலி 7 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் ஷிகர் தவணும், ரஹானேவும் சிறப்பாக ஜோடி சேர்ந்து ரன் குவித்தனர். இருவரும் அரை சதம் அடித்து ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் தவண் 60 ரன்கள் (59 பந்து, 8 பவுண்டரி) எடுத்திருந்தபோது அவர் அடித்த பந்தை ஆம்லா கேட்ச் செய்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 12 ரன்களிலும், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 87 ரன்களிலும் அவுட் ஆகினர்.
   இதையடுத்து பின்வரிசை வீரர்களை கொண்டு சமாளித்துக் கொண்டிருந்த தோனி 27 ரன்களில் போல்டானார். 36 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
   அந்த அணியில் அதிகபட்சமாக ரபடா 4 விக்கெட்டுகளையும், ஸ்டெயின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
   இதையடுத்து 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. ஆட்டநாயகனாக டி காக்கும், தொடர் நாயகனாக டி வில்லியர்ஸும் தேர்வாகினர்.
  சாதனைத் துளிகள்...!
   * 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய மண்ணில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
   * இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்ததே, ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் அதிகபட்ச ஸ்கோராகும். மேலும் இந்திய மைதானங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் போட்டியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.
   * இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் 438 ரன்கள், சர்வதேச அளவில் 4ஆவது மிகப்பெரிய ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன்னர் 2006ஆம் ஆண்டில் இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 443 ரன்களும் (எதிரணி-நெதர்லாந்து), இந்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 439 ரன்களும் (எதிரணி-மேற்கிந்தியத் தீவுகள்) எடுத்துள்ளது. 2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி, 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்திருந்தது.
   * இந்த ஆண்டில் மொத்தம் 61 சிக்ஸர் விளாசி, ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர் விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ். இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டில் கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்) 59 சிக்ஸர் விளாசியதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
   * ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 3 வீரர்கள் சதம் அடிப்பது, இது 2-ஆவது முறையாகும். இந்த ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இதே தென் ஆப்பிரிக்க அணியின் ஆம்லா (153), ரிலீ ருசௌ (128),
   டி வில்லியர்ஸ் (149*) ஆகியோர் சதம் அடித்தனர்.
   * ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் 2-ஆவது மோசமான தோல்வி இதுவாகும். 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்துள்ளது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai