Enable Javscript for better performance
பெண்ணைத் தாக்கிய வழக்கில் அமித் மிஸ்ரா கைது- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணைத் தாக்கிய வழக்கில் அமித் மிஸ்ரா கைது

    By  பெங்களூரு  |   Published on : 28th October 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    21

    பெங்களூரில் ஹோட்டல் அறையில் பெண் ஒருவரை தவறாகப் பேசி தாக்கியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
     முன்னதாக, சம்பவத்துடன் தொடர்புடைய பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்திருந்த போலீஸார், விசாரணைக்கு ஆஜராகுமாறு அமித் மிஸ்ராவுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.
     இந்நிலையில், பெங்களூரில் உள்ள அசோக்நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை ஆஜரானார் அமித் மிஸ்ரா. அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் பிறகு அவரை கைது செய்தனர்.
     இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் (சென்ட்ரல்) சந்தீப் பாட்டில் கூறுகையில், "பெண்ணைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜரான அமித் மிஸ்ரா கைது செய்யப்பட்டு, பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்' என்றார்.
     முன்னதாக, அந்தப் பெண் தாம் அளித்திருந்த புகாரில், "அமித் மிஸ்ராவை மூன்று ஆண்டுகளாக எனக்குத் தெரியும். கடந்த மாதம் பயிற்சிக்காக இதர கிரிக்கெட் வீரர்களுடன் அவர் பெங்களூரு வந்திருந்தார்.
     அப்போது அவரைக் காண, அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றேன். ஆனால், அவர் அங்கு இல்லை. பிறகு அறைக்கு திரும்பிய அமித் மிஸ்ராவுக்கும் எனக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
     தென் ஆப்பிரிக்கா உடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணியில் அமித் மிஸ்ரா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
     "நிரூபணம் ஆகும் வரை விளையாடுவார்': இந்நிலையில், ஐபிஎல் தலைவரான ராஜீவ் சுக்லா கூறுகையில், "அமித் மிஸ்ரா மீதான புகாரை பிசிசிஐ கருத்தில் கொண்டுள்ளது. இந்த வழக்கின் தகவல்களை சேகரித்து வருகிறோம்.
     வழக்கு தொடர்பான சரியான தகவல்கள் கிடைத்த பிறகு, வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அமித் மிஸ்ரா மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர் தொடர்ந்து விளையாடுவார்' என்றார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai