முதல் முறையாக அகதிகளும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு
By நியூயார்க், | Published on : 28th October 2015 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக, ரியோ டி ஜெனீரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் அகதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஒசி) அறிவித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் இதுகுறித்து கூறியதாவது:
இது, உலக அளவில் உள்ள அகதிகளுக்கு ஒரு நம்பிக்கைச் சின்னமாக இருக்கும். எந்த ஒரு நாட்டையோ, தேசிய ஒலிம்பிக் கமிட்டியையோ சார்ந்து இல்லாத காரணத்தால், தகுதியுடைய அகதிகளும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போகிறது.
எனவே, அடுத்த ஆண்டு ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் அகதிகளை அனுமதிப்பதென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது. அணிவகுப்பின்போது தங்களுக்கென தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாத அகதிகள், ஒலிம்பிக் தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் கீதத்துடன் வரவேற்கப்படுவார்கள்.
அகதிகளுக்கு விளையாட்டின் வாயிலாக நம்பிக்கையூட்டும் வகையில் ரூ.13 கோடி நிதியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேவேளையில், திறம்வாய்ந்த அகதிகள் தங்களின் விளையாட்டு எதிர்காலத்தை தொடரும் வகையில் நாங்கள் உதவுவோம்.
அந்த வகையில் ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் 193 நாடுகளும் விளையாட்டில் திறமை வாய்ந்த அகதிகளை கண்டறிய உதவ வேண்டும் என்று தாமஸ் பாச் கூறினார்.