சுடச்சுட

  

  ஓய்வு தாமதமானதற்கு டெண்டுல்கரே காரணம்: வீரேந்திர சேவாக்

  By  புது தில்லி,  |   Published on : 29th October 2015 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  21

  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2007ஆம் ஆண்டே ஓய்வு பெறவிருந்த எனது முடிவை டெண்டுல்கர் கேட்டுக்கொண்டதால் கைவிட்டேன் என்று இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் புதன்கிழமை தெரிவித்தார்.
   இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன்களில் ஒருவர் வீரேந்திர சேவாக். தொடக்க ஆட்டக்காரரான அவர், தனது பேட்டிங் திறமையால் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து பந்து வீச்சாளர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியவர்.
   கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சேவாக், தனது 37-ஆவது பிறந்த தினமான கடந்த 20ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
   சேவாக், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட புகழில் இருந்தபோதே ஓய்வுபெற விரும்பியதாகவும், அப்போது அந்த முடிவை சக வீரரும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கர் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.
   இது தொடர்பாக புதன்கிழமை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வீரேந்திர சேவாக் கூறியதாவது:
   கும்ப்ளே சிறந்த கேப்டன்: ஒவ்வொரு வீரரும் தங்களின் சர்வதேச போட்டியின் உச்சகட்ட புகழில் இருக்கும்போது தான் விடைபெற விரும்புவர். நானும் அதுபோன்ற சிறந்த நிலையில் இருக்கும்போது ஓய்வு முடிவு குறித்த பேச்சை ஆரம்பித்தேன். ஆனால், விதி சிலவற்றை மாற்றிவிட்டது.
   2007 ஆம் ஆண்டு அணியிலிருந்து நான் நீக்கப்பட்டபோதே ஓய்வு பெற விரும்பினேன். ஆனால், அப்போது அந்த முடிவை எடுக்க வேண்டாம் என்று டெண்டுல்கர் என்னை தடுத்தார்.
   2013 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய தொடரின்போது என்னை நீக்குவதற்கு முன்பு தேர்வுக்குழுவினர் எனது எதிர்கால திட்டம் என்ன என்று என்னிடம் கேட்கவில்லை. தேர்வுக் குழுவினர் தங்களது முடிவினை என்னிடம் தெரிவித்தனர். அந்த தொடரின்போதே நான், ஓய்வை அறிவித்திருக்க வேண்டும்.
   என்னுடைய ஓய்வு விஷயத்தில் எனது இரு மகன்களும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், அதனை நான் பெரிதுபடுத்தவில்லை. நான் விளையாடியதில் அனில் கும்ப்ளே சிறந்த கேப்டன். எங்களின் நம்பிக்கையை அவர் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்.
   வர்ணனையாளர்? எப்போதும் கிரிக்கெட்டுடன் தொடர்புடையவனாகவே இருக்கிறேன். பிசிசிஐ ஏதேனும் வாய்ப்பு வழங்கினாலோ அல்லது வர்ணனையாளர் வாய்ப்புகளே கிடைத்தாலோ அது குறித்து பரிசீலிப்பேன். எனது பேட்டிங்கைப் போலவே, எனது வர்ணனையும் இருக்கும்' என்றார் சேவாக்.
   இந்திய அணியில் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக், 8,586 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 47.35 ஆகும். 251 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள அவர், 8,273 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ரஞ்சி கோப்பை போட்டியில் ஹரியாணா அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர், அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள முன்னாள் வீரர்களுக்கான "ஆல்-ஸ்டார்ஸ்' டி-20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவுள்ளார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai