
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி, இந்தியா செல்ல அனுமதி மறுத்துள்ளது அந்நாட்டு அரசு.
பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அணியை அனுப்ப முடியும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அணி, இந்தியா வருவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வரும் 19-ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் போட்டியை மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் ஹிமாசலப் பிரதேச அரசும் தங்களால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என தெரிவித்தது. அதைத் தொடர்ந்து ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது. எனினும் பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிஸ்ஸார் அலி கான் கூறியதாவது: பாகிஸ்தான் அணி இந்தியா புறப்படுவதற்கான அனுமதியை வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை. பாகிஸ்தானியர்களுக்கு அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. எங்கள் வீரர்கள் அங்கு சென்று விளையாடும்போது அவர்கள் எவ்வித நெருக்கடியும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை. பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணியை அனுமதிக்கமாட்டோம். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் எப்படி கிரிக்கெட் விளையாட முடியும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமரலாம். அந்த மைதானத்தில் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து எங்கள் வீரர்கள் மீது கற்கள் வீசப்பட்டால் என்ன செய்ய முடியும்? அதனால் பொதுவான மைதானத்தில் போட்டியை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், "இந்தியாவில் இதற்கு முன்னர் ஏராளமான சர்வதேச போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அப்போதெல்லாம் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன என்பதை அனைவருக்கும் நினைவுகூர்கிறேன். சமீபத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்கூட பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பங்கேற்றது அனைவருக்கும் தெரியும். அதேபோன்று டி20 உலகக் கோப்பை போட்டியும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும்' என்றார்.