Enable Javscript for better performance
தோனியை தோற்கடித்தார் ரெய்னா: குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    தோனியை தோற்கடித்தார் ரெய்னா: குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    By  ராஜ்கோட்,  |   Published on : 15th April 2016 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1

    ஐபிஎல் போட்டியில் ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணி வெற்றி பெற்றது.
     இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ராஜ்கோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புணே அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 12 பந்துகள் மிச்சமிருக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
     முன்னதாக ஆடிய புணே அணியில் ரஹானேவும், டூ பிளஸ்ஸிஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த ரஹானே ஆட்டமிழந்தார்.
     அதைத் தொடர்ந்து வந்த கெவின் பீட்டர்சன், மறுமுனையில் நின்றிருந்த டூ பிளஸ்ஸிஸுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் அணிக்கான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
     எனினும், 31 பந்துகளில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சன் பிராவோவின் பந்துவீச்சில் போல்டானார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் களமிறங்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த டூ பிளஸ்ஸிஸ் 43 பந்துகளில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
     அவரைத் தொடர்ந்து தோனி களமிறங்கினார். மறுமுனையில் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவன் ஸ்மித் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஃபாக்னரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், தோனியும், மிட்செல் மார்ஷும் இணைந்து விளையாடினர். 11 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த மார்ஷ், ஜடேஜாவின் பந்து ஸ்டம்பை முத்தமிட வழிவிட்டார்.
     20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது புணே அணி. இறுதியாக கேப்டன் தோனி 10 பந்துகளுக்கு 22 ரன்களுடனும், ரஜத் பாட்டியா ரன் ஏதும் இன்றியும் களத்தில் இருந்தனர். குஜராத் அணி சார்பில், பிரவீன் தாம்பே, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும், பிராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
     இதையடுத்து, 164 ரன்கள் இலக்கை எட்ட களமிறங்கியது குஜராத் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும், மெக்கல்லமும் களமிறங்கினர்.
     இருவரும் அதிரடியாக ஆடி வந்த நிலையில், 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்த பிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் அஸ்வினின் பந்துவீச்சில் இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து கேப்டன் ரெய்னா வந்தார்.
     இந்நிலையில், அதிரடியாக ஆடி அரைசதத்தை நெருங்கிய மெக்கல்லம் 49 ரன்களில் சர்மாவின் பந்துவீச்சில் டூ பிளஸ்ஸிஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் பிராவோ வந்தார்.
     ரெய்னா நிதானமாக ஆட, பிராவோ பட்டயை கிளப்பினார். 15ஆவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியை பறக்கவிட்டார். 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா, முருகன் அஸ்வினின் பந்துவீச்சில் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
     அவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். இந்நிலையில் கிடைத்த ஃப்ரீ ஹிட் வாய்ப்பை பயன்படுத்தி வெற்றியை நோக்கி அணியை பிரமாதமாக அழைத்துச் சென்றார் பிராவோ.
     வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில், ஆர்.பி.சிங் ஒயிடு பந்து வீசி குஜராத்துக்கு வெற்றியை தாரை வார்த்துக் கொடுத்தார். இறுதியாக பிராவோ 22 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
     புணே சார்பில், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சுருக்கமான ஸ்கோர்
     புணே இன்னிங்ஸ்
     ரஹானே 21 (17)
     டூ பிளஸ்ஸிஸ் 69 (43)
     பீட்டர்சன் 37 (31)
     தோனி 22 (10)
     உபரிகள் 2
     மொத்தம் (20 ஓவர்களில்
     5 விக்கெட் இழப்புக்கு) 163
     குஜராத் இன்னிங்ஸ்
     ஆரோன் பிஞ்ச் 50 (36)
     மெக்கல்லம் 49 (31)
     ரெய்னா 24 (24)
     பிராவோ* 22 (10)
     உபரிகள் 15
     மொத்தம் (18 ஓவர்களில்
     3 விக்கெட் இழப்புக்கு) 164
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai