Enable Javscript for better performance
பிளே ஆஃப் சுற்றை நெருங்கியது ஹைதராபாத்; பஞ்சாப் வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பிளே ஆஃப் சுற்றை நெருங்கியது ஹைதராபாத்; பஞ்சாப் வெளியேற்றம்

    By DN  |   Published on : 15th May 2016 09:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    IPL Yuvaraj

    மொஹாலி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 46-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

    இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. அதேநேரத்தில் 8-ஆவது தோல்வியைச் சந்தித்த பஞ்சாப், 2-ஆவது அணியாக போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே புணே அணி வெளியேறிவிட்டது.

    மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் விஜய் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ஆம்லாவுடன் இணைந்தார் விருத்திமான் சாஹா. இந்த ஜோடி சிறப்பாக ஆட, 6.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது பஞ்சாப்.

    அசத்தலாக ஆடிய ஆம்லா 30 பந்துகளில் அரை சதமடித்தார். ஐபிஎல் போட்டியில் அவர் அடித்த முதல் அரை சதம் இது. அந்த அணி 87 ரன்களை எட்டியபோது சாஹா 27 ரன்களில் (23 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த குருகீரத் சிங்  20 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, டேவிட் மில்லர் களம்புகுந்தார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஆம்லா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 4 ரன்களில் சதத்தை நழுவவிட்டார். அவர் 56 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்து புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் ஆனார். கடைசிக் கட்டத்தில் டேவிட் மில்லர் 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது பஞ்சாப்.

    ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 32 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

    அதிரடி தொடக்கம்: பின்னர் ஆடிய ஹைதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர்-ஷிகர் தவன் ஜோடி 8 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்தியது. ஷிகர் தவன் 22 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டானார். 38 பந்துகளில் அரை சதம் கண்ட வார்னர், 41 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்து ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து தீபக் ஹூடாவுடன் இணைந்தார் யுவராஜ் சிங். அவர், வந்த வேகத்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க, மறுமுனையில் ஹூடாவும் அதிரடியாக ஆடினார். அந்த அணி 139 ரன்களை எட்டியபோது ஹூடா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து பென் கட்டிங் களமிறங்க, ஹைதராபாதின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

    மோஹித் சர்மா வீசிய 18-ஆவது ஓவரில் யுவராஜ் சிங் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாச, அதே ஓவரில் பென் கட்டிங் ஒரு சிக்ஸரை விளாசினார். அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைக்க, ஹைதராபாதின் வெற்றி எளிதானது.

    சந்தீப் சர்மா வீசிய 19-ஆவது ஓவரில் கட்டிங் ஒரு சிக்ஸரை விளாச, கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மோஹித் சர்மா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் யுவராஜ் சிங் பிரமாண்ட சிக்ஸரை விளாச, வெற்றி உறுதியானது. இறுதியில் 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஹைதராபாத்.

    யுவராஜ் சிங் 24 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42, பென் கட்டிங் 11 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆம்லா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai