உலகக்கோப்பை கால்பந்து: 7-ஆவது முறையாக காலிறுதிக்கு தகுதிபெற்றது பிரேசில்

உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று போட்டியில் பிரேசில் அணி மெக்ஸிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 நாக் அவுட் சுற்று போட்டிகளில் பிரான்ஸ், உருகுவே, ரஷியா மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

இந்நிலையில், திங்கள்கிழமை 5-ஆவது நாக் அவுட் சுற்று போட்டி நடைபெற்றது. இதில், பிரேசில் அணியும், மெக்ஸிகோ அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதனால் 2-ஆவது பாதி ஆட்டம் பரபரப்புடன் தொடங்கியது. 

பிரேசில் அணி சார்பாக 51-ஆவது நிமிடத்தில் நெய்மர் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால், பிரேசில் அணி 1-0 என ஆதிக்கத்துடன் ஆட்டத்தை தொடர்ந்தது. பின்னர், போட்டி முடிவதற்கு 2 நிமிடத்துக்கு முன் ராபர்டோ ஃபிர்மினோ ஒரு கோல் அடிக்க பிரேசில் அணி 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.

இதன்மூலம், ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. பிரேசில் அணி உலகக்கோப்பை காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவது இது 7-ஆவது முறையாகும். 

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய வீரர்களின் அணிகள் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். நெய்மராவது அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி ஆறுதல் அளிப்பாரா என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த வெற்றி நிச்சயம் மகிழ்ச்சியை தரும். 

திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் பெல்ஜியம், ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com