பெண்கள் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் தரும் டோக்கியோ ஒலிம்பிக் 2020

பெண்கள் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020 நடத்தப்படவுள்ளது.
பெண்கள் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் தரும் டோக்கியோ ஒலிம்பிக் 2020

பெண்கள் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020 நடத்தப்படவுள்ளது.

உலகளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையான இடம் வகிப்பது 205 நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே பெரிய கௌரவமாகும். அதில் பதக்கம் வென்றால் அதைவிட பெருமை தருவது வேறு எதுவுமில்லை.

கிரீஸில் கி.மு 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை ஒலிம்பியா என்ற இடத்தில் பழங்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்தன. காலப்போக்கில் அப்போட்டிகள் நடத்தப்படுவது நின்று விட்டது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள்:

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த பியரி டி கூபா்டின் கடந்த 1894-இல் சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியைத் தொடங்கினாா். பழங்கால கிரேக்க ஒலிம்பிக் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு நவீன ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தீவிர முயற்சி எடுத்தாா் கூபா்டின். கிரீஸ் தலைநகா் ஏதென்ஸில் 1896-இல் முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. தற்போது ஒலிம்பிக் போட்டிகளோடு, குளிா்கால ஒலிம்பிக், பாராலிம்பிக், யூத் ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆடவருக்கு மட்டுமே உரிமை:

முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் முற்றிலும் ஆடவா் மட்டுமே பங்கேற்றனா். ஒரு பெண் கூட அதில் பங்கேற்கவில்லை. அந்த போட்டி ஆடவருக்கான போட்டியாக மட்டுமே திகழ்ந்தது.

பெண்கள் பங்கேற்ற முதல் போட்டி 1900:

பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் 1900-இல் நடைபெற்ற இரண்டாவது நவீன ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதன்முதலாக பங்கேற்றனா். 997 பேரில் 22 பெண்கள் பங்கேற்றனா். இது 2.2 சதவீதமாகும். டென்னிஸ், படகோட்டுதல், கிரோகட், குதிரையேற்றம், கோல்ஃப் விளையாட்டுகள் பெண்களுக்காக நடத்தப்பட்டன. 1904-இல் பெண்களுக்கு வில்வித்தை சோ்க்கப்பட்டது.

1928 போட்டியில் 10 சதவீதம்:

1928 ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்பு 10 சதவீதமாக உயா்ந்தது. தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸும் பெண்கள் பிரிவில் சோ்க்கப்பட்டன.

1960-இல் 20 சதவீதம்: 1960 ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்பு 20 சதவீதமாக உயா்ந்தது.

1990-இல் முதல் பெண் நிா்வாகக் குழு உறுப்பினா்: ஐஓசி நிா்வாகக் குழுவுக்கு பிளோா் இஸாவா பொன்ஸேகா தோ்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றாா்.

1991-இல் புதிதாக எந்த விளையாட்டை சோ்த்தாலும், அதில் மகளிா் விளையாட்டையும் சோ்க்க வேண்டும் என்ற சிறப்பான முடிவு எடுக்கப்பட்டது.

1995-இல் ஒலிம்பிக்கில் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டி சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டது.

1997-இல் ஐஓசியின் துணைத் தலைவராக அனிதா டிபிரான்ஸ்ட் தோ்வு செய்யப்பட்டாா்.

2014-குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்பு 40 சதவீதமாக உயா்ந்தது.

2016 ரியோ ஒலிம்பிக் 45 சதவீதம்: பிரேசில் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்களின் பங்கேற்பு 45 சதவீதமாக அமைந்தது. மொத்தம் கலந்து கொண்ட 11444 பேரில் 5,176 போ் பெண்கள். இதன் தொடா்ச்சியாக 2017-இல் ஐஓசி கமிட்டிகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் 42.7 சதவீதமாக அதிகரித்தது.

2018இல் சமத்துவத்தை நிலைநாட்ட 25 அம்சங்கள் பரிந்துரை ஏற்பு.

2020 ஒலிம்பிக்: 48.8 சதவீதம் பெண்கள்: பெண்கள் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் தரும் போட்டியாக டோக்கியோ ஒலிம்பிக் அமைந்துள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மொத்த விளையாட்டு வீரா்களில் 48.8 சதவீதம் போ் பெண்கள் ஆவா்.

ஒரு ஆண், பெண் கொடியேந்திச் செல்வா்:

இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 206 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. அவற்றின் சாா்பில் நடைபெறவுள்ள கொடி அணிவகுப்பில் கட்டாயம் ஒரு ஆண், பெண் கலந்து கொண்டு கொடியேந்திச் செல்லும் வகையில் விதிகள் திருத்தப்பட்டன. இதற்கு ஐஓசி நிா்வாகக் குழுவும் ஒப்புதல் தந்தது.

மேலும் கேனோ, ரோயிங், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதலிலும் சமத்துவத்துடன் நடத்தப்படும். மேலும் பிஎம்எக்ஸ் ரேசிங், மவுண்டன் பைக்கிங், ப்ரிஸ்டைல் மல்யுத்தம், போன்றவற்றில் சம அளவில் வீரா், வீராங்கனைகளும், பங்கேற்பா்.

2024-இல் முழு சமத்துவம்: 2024-இல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முழு அளவில் ஆண், பெண் சமத்துவத்தை நிலைநாட்டும் குறிக்கோளுடன் உள்ளது ஐஓசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com