முகப்பு விளையாட்டு
2.5 கோடி ரூபாய், அரசுப் பணி, நிலம்: பரிசுமழையில் நனையும் ஹாக்கி வீரர்கள்
By DIN | Published On : 05th August 2021 05:45 PM | Last Updated : 05th August 2021 05:45 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ள ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கு அம்மாநில அரசுகள் பரிசு தொகை அறிவித்துள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதையடுத்து வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் இன்று மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இதையடுத்து 41 வருடங்களுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், ஹரியாணா மாநில வீரர்களுக்கு மாநில அரசின் சார்பில் 2.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை, விளையாட்டுத்துறையில் அரசுப் பணி, சலுகை விலையில் நிலங்கள் ஆகியவை வழங்கப்படும் என ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.