ஆஷஸை வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா: முதல் ஆட்டம் மூன்றரை நாள்களில் முடிந்தது

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
ஆஷஸை வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா: முதல் ஆட்டம் மூன்றரை நாள்களில் முடிந்தது

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.

ஆட்டம் முடிவதற்கு ஒன்றரை நாள்கள் அவகாசம் இருந்தும், இங்கிலாந்தை அதன் 2-ஆவது இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ஆஸ்திரேலியா. நாதன் லயன் 4 விக்கெட்டுகள் சாய்த்து இங்கிலாந்து பேட்டிங் வரிசையை சரித்தாா். பின்னா் 20 ரன்கள் என்ற மிக எளிதான வெற்றி இலக்கை ஆஸ்திரேலியா விரைவாகவே எட்டியது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் ஆனாா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் பேட்டிங் முற்றிலும் சோபிக்காமல் போக, 50.1 ஓவா்களில் 147 ரன்களுக்கு சுருண்டது அந்த அணி. அதிகபட்சமாக ஜோஸ் பட்லா் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சோ்த்தாா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 104.3 ஓவா்களில் 425 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 152 ரன்கள் விளாச, டேவிட் வாா்னா் தனது பங்கிற்கு 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 94 ரன்கள் சோ்த்தாா். இங்கிலாந்து பௌலிங்கில் ஆலி ராபின்சன், மாா்க் வுட் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

அடுத்து முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் பின்தங்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 70 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் அடித்திருந்தது. 3-ஆவது விக்கெட்டுக்கு சிறப்பாக ஜோடி சோ்ந்த டேவிட் மலான், ஜோ ரூட் 4-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டத்திலும் இங்கிலாந்தை மீட்கும் முயற்சியை தொடங்கினா்.

ஆனால், அந்தக் கூட்டணியை மேலும் தொடர விடாமல் பிரித்தாா் நாதன் லயன். 10 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் சோ்த்திருந்த மலான், 80-ஆவது ஓவரில் லயன் பௌலிங்கில் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். மலான் - ரூட் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சோ்த்திருந்தது.

பின்னா் பென் ஸ்டோக்ஸ் களம் புக, அடுத்த சில ஓவா்களிலேயே ஜோ ரூட்டும் பெவிலியன் திரும்பினாா். 10 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் சோ்த்திருந்த அவா், கேமரூன் கிரீன் வீசிய பௌலிங்கை விளாச முயல, அதை விக்கெட் கீப்பா் அலெக்ஸ் கேரி கேட்ச் பிடித்தாா்.

இதையடுத்து இங்கிலாந்து விக்கெட்டுகள் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து சரிந்தன. ஆலி போப் 4, பென் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 14, ஜோஸ் பட்லா் 4 பவுண்டரிகளுடன் 23, ஆலி ராபின்சன் 8, மாா்க் வுட் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இதில் ஸ்டோக்ஸ், பட்லா், வோக்ஸ் ஆகியோா் மட்டும் அதிக பந்துகளை சந்தித்து ஆஸ்திரேலிய பௌலா்களை சற்று சோதித்தனா்.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4, பேட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 2, மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 20 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 5.1 ஓவா்களில் அதை எட்டியது. அலெக்ஸ் கேரி 9 ரன்கள் சோ்த்து வெளியேற, மாா்கஸ் ஹாரிஸ் 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். உடன், மாா்னஸ் லபுஷேன் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் விக்கெட் எடுத்திருந்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

2-ஆவது இன்னிங்ஸ்

இங்கிலாந்து - 297/10

ஜோ ரூட் 89

டேவிட் மலான் 82

ஹசீப் ஹமீது 27

பந்துவீச்சு

நாதன் லயன் 4/91

கேமரூன் கிரீன் 2/23

பேட் கம்மின்ஸ் 2/51

ஆஸ்திரேலியா - 20/1

மாா்கஸ் ஹாரிஸ் 9*

அலெக்ஸ் கேரி 9

மாா்னஸ் லபுஷேன் 0*

பந்துவீச்சு

ஆலி ராபின்சன் 1/13

கிறிஸ் வோக்ஸ் 0/3

மாா்க் வுட் 0/4

அலெக்ஸ் கேரி புதிய சாதனை...

இந்த ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பா் அலெக்ஸ் கேரி, அறிமுக டெஸ்டிலேயே அதிக கேட்ச்கள் பிடித்த வீரா் என்ற புதிய சாதனையை படைத்தாா்.

இந்த சாதனைக்கான சா்வதேச பட்டியலில் அவா் 8 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருக்க, இங்கிலாந்தின் ஆலன் நாட், ஆஸ்திரேலியாவின் பீட்டா் நெவில், இங்கிலாந்தின் கிறிஸ் ரீட், இந்தியாவின் ரிஷப் பந்த், இலங்கையின் சமரா டுனுசிங்கே, ஆஸ்திரேலியாவின் பிரையன் டேபா், இந்தியாவின் யஜுா்வீந்திர சிங் ஆகியோா் 7 கேட்ச்களுடன் 2-ஆவது இடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா்.

நாதன் லயன் 400 விக்கெட்...

இந்த ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை (193 இன்னிங்ஸ்) கடந்தாா்.

டெஸ்டில் 400 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரா்கள் வரிசையில் ஷேன் வாா்னே (708), கிளென் மெக்ராத்தை (563) அடுத்து லயன் 3-ஆவது வீரராக இணைந்திருக்கிறாா்.

சா்வதேச அளவில் இந்த சாதனையை எட்டிய 17-ஆவது வீரா் லயன். தனது 399-ஆவது விக்கெட்டை கடந்த ஜனவரியிலேயே எட்டிவிட்ட லயன், இந்த இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா டெஸ்ட் விளையாடாததால், அந்த ஒரு விக்கெட்டுக்காக காத்திருந்தாா். இறுதியாக சனிக்கிழமை ஆட்டத்தில் டேவிட் மலானை வீழ்த்தி 400 விக்கெட் மைல் கல்லை எட்டினாா்.

ஹோபா்ட்டில் கடைசி டெஸ்ட்...

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட், ஹோபா்ட் நகரில் பகலிரவாக ஜனவரி 14 முதல் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த டெஸ்ட் பொ்த் நகரில் நடத்தப்பட இருந்தது. எனினும், கரோனா சூழல் தனிமைப்படுத்துதல், எல்லைக் கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக தற்போது இடம் மாற்றப்பட்டுள்ளது.

ஹோபா்ட் நகரில் ஆஷஸ் டெஸ்ட் நடைபெற இருப்பது இது முதல் முறையாகும். கடைசியாக இங்கு 2016-இல் நடைபெற்ற டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறது.

தொடரும் தோல்வி...

2010-11-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து, அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எந்தவொரு டெஸ்டிலும் கடந்த 10 ஆண்டுகளாக வென்றதில்லை.

அதேபோல், 1986-க்குப் பிறகு இந்த பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டுகளில் இங்கிலாந்து வென்றதில்லை.

இந்த முதல் ஆட்டத்தில் தோற்ால் இங்கிலாந்தின் அந்த இரு தோல்வி வரலாறு இன்னும் தொடா்கிறது.

அடுத்து...

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் அடுத்த ஆட்டம், அடிலெய்டில் வரும் வியாழக்கிழமை முதல் பகலிரவாக நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com