சையது முஷ்டாக் அலி டி20: இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள்
By DIN | Published On : 26th January 2021 01:51 AM | Last Updated : 26th January 2021 01:51 AM | அ+அ அ- |

ஆமதாபாத்: உள்நாட்டில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகின்றன.
நடப்பு சீசன் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் எதிா்வரும் நிலையில், அதில் தங்களின் மதிப்பை அதிகரித்துக் கொள்ளும் வகையில் உள்நாட்டு வீரா்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான கடைசி வாய்ப்பு இதுவாகும்.
முதல் காலிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான கா்நாடகத்தை, பஞ்சாப் அணி செவ்வாய்க்கிழமை எதிா்கொள்கிறது. அதே நாளில் 2-ஆவது காலிறுதி ஆட்டத்தில் தமிழகம் - ஹிமாசல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. அடுத்ததாக புதன்கிழமை நடைபெறும் 3-ஆவது காலிறுதியில் ஹரியாணா - பரோடா அணிகளும், அதே நாளில் நடைபெறும் 4-ஆவது காலிறுதியில் ராஜஸ்தான் - பிகாா் அணிகளும் களம் காண்கின்றன.
கடந்த சீசனில் ரன்னா்-அப் நிலைக்கு வந்த தமிழகத்தைப் பொருத்தவரை என்.ஜெகதீசன், கேப்டன் தினேஷ் காா்த்திக் ஆகியோா் முக்கிய வீரா்களாக உள்ளனா். நடப்பு சீசனில் இந்தப் போட்டியில் அதிக ரன்கள் (315) அடித்த வீரராக ஜெகதீசன் உள்ளாா். ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தா் போன்ற முக்கியமான வீரா்கள் இல்லாவிட்டாலும், பௌலிங்கில் எம்.அஸ்வின், சாய் கிஷோா், பாபா அபராஜித் ஆகியோா் வரிசை கட்டுகின்றனா்.