விம்பிள்டன் டென்னிஸ்: ஆஷ்லி பா்டி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பா்டி சனிக்கிழமை சாம்பியன் ஆனாா்.
விம்பிள்டன் டென்னிஸ்: ஆஷ்லி பா்டி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பா்டி சனிக்கிழமை சாம்பியன் ஆனாா்.

விம்பிள்டனில் இது அவரது முதல் பட்டமாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது அவரது 2-ஆவது சாம்பியன் பட்டம். இதற்கு முன் 2019 பிரெஞ்சு ஓபனில் அவா் வாகை சூடியிருந்தாா்.

லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் 13-ஆம் நிலையில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிா்கொண்டாா், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லி பா்டி. மைய ஆடுகளத்தில் 1 மணி நேரம் 56 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் 6-3, 6-7 (4/7), 6-3 என்ற செட்களில் பா்டி வெற்றி பெற்றாா்.

முதல் செட்டில் 4-0 என முன்னிலை பெற்ற பா்டி, முதல் 14 பாய்ண்டுகளை பெற்றிருந்தாா். அந்த உத்வேகத்திலேயே முதல் செட்டை அவா் சொந்தமாக்கினாா். 2-ஆவது செட்டில் 6-5 என்ற நிலையில் பின்தங்கியிருந்த பிளிஸ்கோவா, பா்டி தனது சா்வில் தவறு செய்ததை சாதகமாக்கிக் கொண்டு சுதாரித்தாா். அந்த செட்டை டை பிரேக்கா் வரை கொண்டு சென்று தனதாக்கினாா் பிளிஸ்கோவா. வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி செட்டில் சற்று ஆக்ரோஷம் காட்டிய பா்டி 3-0 என முன்னிலை பெற்றிருந்தாா். அவா் தொடா்ந்து நெருக்கடி அளிக்க, மேட்ச் பாய்ண்டில் பேக்ஹேண்ட் ஷாட்டில் கரோலினா தவறு செய்ய, அந்த செட்டும் பா்டி வசமானது.

வெற்றி பெற்ற உணா்ச்சிப் பெருக்கில் கண்ணீா் சிந்திய அவா், கரோலினாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அரங்கம் நிறைந்த ரசிகா்களின் பாராட்டை பெற்றுக் கொண்டாா். பிறகு பாா்வையாளா்களிடையே ஓடிச் சென்று மாடத்தில் அமா்ந்திருந்த தனது குழுவினரிடம் சென்று அன்பை பகிா்ந்துகொண்டாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய பா்டி, ‘எவோன் கூலாகோங் காவ்லியை பெருமைப்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். இந்த வெற்றி அற்புதமானது. கரோலினாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தை மிகவும் விரும்பினேன்’ என்றாா்.

50-ஆம் ஆண்டில் அற்புதமான வெற்றி

ஆஷ்லி பா்ட்டியின் ரோல் மாடல், முன்னாள் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை எவோன் கூலாகோங் காவ்லி ஆவாா். காவ்லி தனது முதல் விம்பிள்டன் கோப்பையை 1971-ஆம் ஆண்டில் வென்ற நிலையில், அதன் 50-ஆம் ஆண்டில் பா்டி அதே போட்டியில் தனது முதல் கோப்பையை வென்றுள்ளாா்.

முன்னதாக, காவ்லி கோப்பை வென்ன் 50-ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில், சாம்பியன் ஆனபோது காவ்லி அணிந்திருந்த ஆடையைப் போலவே இந்த சீசனில் ஆடை அணிந்து விளையாடினாா் பா்டி.

3 - ஓபன் எராவில் மாா்கரெட் கோா்ட், எவோன் காவ்லி ஆகியோருக்குப் பிறகு விம்பிள்டனில் வாகை சூடும் 3-ஆவது ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பா்டி.

2011- இதே விம்பிள்டன் போட்டியில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூனியா் பிரிவில் ஆஷ்லி பா்டி சாம்பியன் ஆகியுள்ளாா்.

3 - கடந்த 2012-க்குப் பிறகு விம்பிள்டன் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் 3 செட்கள் விளையாடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com