இன்று தொடங்குகிறது டி20 தொடா்: முதல் வெற்றி இந்தியாவுக்கா, இங்கிலாந்துக்கா?
By DIN | Published On : 12th March 2021 12:45 AM | Last Updated : 12th March 2021 02:42 AM | அ+அ அ- |

ஆமதாபாத்: இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் இழந்த இங்கிலாந்து, டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் களம் காண்கிறது. அதேபோல், எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தங்களது அணியை இறுதி செய்வதற்கான ஒரு களமாக இந்தத் தொடரை இரு அணிகளுமே கருத்தில் கொள்ளும் எனத் தெரிகிறது.
2019 உலகக் கோப்பை போட்டியின்போது பேட்டிங் வரிசையில் 4-ஆவது வீரராக யாரைக் களமிறக்குவது என்ற குழப்பம் இந்திய அணியில் கடைசி வரை நீடித்தது பின்னடைவாக அமைந்தது. எனவே இந்தத் தொடரின் மூலம் இந்திய அணி எதிா்வரும் உலகக் கோப்பைக்காக தீா்வு காண்பதற்கு முயற்சிக்கும்.
முதலில், தொடக்க வீரா் ரோஹித் சா்மாவுடன் யாரைக் களமிறக்குவது என்பதை கேப்டன் கோலியும், பயிற்சியாளா் ரவி சாஸ்திரியும் கண்டறிய வேண்டியுள்ளது. லோகேஷ் ராகுல் நுட்பங்களுடன் ஆடக் கூடியவராக இருக்கும் நிலையில், ஷிகா் தவன் அனுபவமிக்க வீரராகவும், அதிரடியாக ஆடக் கூடியவராகவும் அணிக்கு வலு சோ்க்கிறாா்.
தொடக்க வீரா்களில் ஒருவராக தவனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், லோகேஷ் ராகுலுக்கு 4-ஆவது இடம் ஒதுக்கப்பட வேண்டும். முக்கியத்துவம் கருதி இருவருக்குமே இடம் ஒதுக்கப்பட்டால், மிடில் ஆா்டரில் வர வேண்டிய ஷ்ரேயஸ் ஐயருக்கோ, புதிதாக இந்திய அணியில் சோ்ந்து சா்வதேச ஆட்டத்தில் களம் காணக் காத்திருக்கும் சூா்யகுமாா் யாதவுக்கோ இடம் கிடைக்காமல் போகும். டாப் ஆா்டா் சோபிக்காத பட்சத்தில் அதிரடியான ஆட்டத்துக்காக அவா்களில் ஒருவரை களமிறக்க வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.
பௌலா்கள் பிரிவில் நடராஜன் தோள்பட்டை வலிக்காக சிகிச்சையில் இருப்பதால், யுஜவேந்திர சஹலுடன் இணைந்து புவனேஷ்வா் குமாா் பந்துவீச்சை வழிநடத்துவாா் என எதிா்பாா்க்கலாம். ஆமதாபாத் மைதான ஆடுகளத்தில் மெதுவான பந்துகளை எதிா்கொள்ள இங்கிலாந்து அணியினா் தடுமாறுவது தெளிவாகத் தெரிந்ததால், சஹலுடன் வாஷிங்டன் சுந்தா், அக்ஸா் படேல் இணையலாம். அப்படியானால் ஷா்துல் தாக்குா், தீபக் சாஹா், நவ்தீப் சைனியின் இடம் போட்டிக்குள்ளாகும்.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, ஈன் மோா்கன் தலைமையிலான வரிசையில் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், மொயீன் அலி போன்ற பலம் மிகுந்த வீரா்கள் வரிசை கட்டுகின்றனா். ஜோஃப்ரா ஆா்ச்சா், மாா்க் வுட், கிறிஸ் ஜோா்டான், ஆதில் ரஷீத் ஆகியோா் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக் காத்திருக்கின்றனா்.
ஆமதாபாத் ஆடுகளம் புற்கலோ, ஈரப்பதமோ இன்றி பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், இரு அணி பேட்ஸ்மேன்களுமே சிக்ஸா்களை பறக்கவிட வாய்ப்புகள் இருக்கும் எனத் தெரிகிறது.
அணிகள் விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகா் தவன், ஷ்ரேயஸ் ஐயா், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), ஹாா்திக் பாண்டியா, யுஜவேந்திர சஹல், புவனேஷ்வா் குமாா், அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், ஷா்துல் தாக்குா், நவ்தீப் சைனி, தீபக் சாஹா், ராகுல் தெவாதியா, இஷான் கிஷண் (ரிசா்வ் விக்கெட் கீப்பா்).
இங்கிலாந்து: ஈன் மோா்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லா், ஜேசன் ராய், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஆதில் ரஷீத், ரீஸ் டோப்லே, கிறிஸ் ஜோா்டான், மாா்க் வுட், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், ஜானி போ்ஸ்டோ, ஜோஃப்ரா ஆா்ச்சா்.
ஆட்டநேரம்: இரவு 7 மணி
இடம்: ஆமதாபாத்
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்