முகப்பு விளையாட்டு
30 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் புதிய சாதனை; வார்னர் மீது திரும்பும் கவனம்
By DIN | Published On : 14th November 2021 11:35 AM | Last Updated : 14th November 2021 11:35 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள், இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதே இல்லை. ஒரு காலத்தில், உலக கிரிக்கெட்டை ஆஸ்திரேலியா ஆட்டி படைத்துவந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது.
இருப்பினும், இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஓரளவுக்கு நல்ல ஆட்டத்தையே ஆஸ்திரேலியா வெளிப்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் வார்னர் ஃபார்முக்கு திரும்பியது அந்த அணிக்குப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாகவே தடுமாறி வந்த வார்னர், இப்போது தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்.
6 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 236 ரன்களை வார்னர் குவித்துள்ளார். இவரை ஒப்பிடுகையில், மற்ற வீரர்கள் யாரும் ஆட்டத்தில் சோபிக்காமல் இருப்பது அந்த அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் வார்னர் 30 ரன்களை எடுக்கும் பட்சத்தில் புதிய சாதனையை அவர் படைக்கவுள்ளார். இந்த டி20 உலகக் கோப்பையில் 236 ரன்களை எடுத்துள்ள வார்னர், இன்று 30 ரன்கள் எடுத்தால் ஒரே டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை அவர் படைப்பார்.
இதையும் படிக்க | குழந்தைகள் நாள்: நேருவும் குழந்தைகளும்
இதற்கு முன்னதாக கடந்த 2007 உலகக் கோப்பையில் மேத்யூ ஹேடன் 265 ரன்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அடுத்ததாக வாட்சன் 2012இல் 249 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.