முகப்பு விளையாட்டு
சத்தீஸ்கர் ரஞ்சி அணியின் கேப்டன் மீது மோசடி வழக்கு..!
By DIN | Published On : 12th May 2022 03:32 PM | Last Updated : 12th May 2022 03:32 PM | அ+அ அ- |

ஹர்பிரீத் சிங் பாட்டியா
போலியான ஆவணங்களை சமர்பித்து முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் வேலை வாங்க முயற்சி செய்ததாக சத்தீஸ்கர் மாநில ரஞ்சி அணியின் கேப்டன் ஹர்பிரீத் சிங் பாட்டியா மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
31 வயதாகும் ஹர்பிரீத் சிங் பாட்டியா சத்தீஸ்கர் மாநிலத்தின் பாலோடு மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவர் மீது விதான் சபா காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹர்பிரீத் சிங் போலியான ஆவணங்களை சமர்பித்து முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கணக்கர் வேலையை பெற முயன்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதன்மை கணக்காளர் துறையிலிருந்து கிரிக்கெட் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆடிட்டர் மற்றும் தணிக்கையாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறியது, “ கிரிக்கெட் வீரர் பாட்டியா அவரது ஆவணங்களை சமர்பித்து அந்த ஆவணங்களை சரிபார்த்த பின்னரே அவர் நேரடியாக அழைக்கப்பட்டார். மேலும், அவரது செயல்திறனை பொறுத்தே அவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் பந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற பி.காம் பட்டத்தினை சமர்பித்திருந்தார். அதனை உறுதிபடுத்த முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தொடர்பு கொண்டோம். ஆனால், அது போல் எந்த ஒரு பட்டத்தினையும் பல்கலைக்கழகம் வழங்கவில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது” என்றனர்.
கிரிக்கெட் வீரர் பாட்டியா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 467-ன் கீழ் காவல்துறையினர் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பாட்டியா கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் 19 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒரு வீரராக இருந்துள்ளார். இவரை கடந்த 2011 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் ஏலத்தில் எடுத்தது. அதன் பின்னர் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.