டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த வங்கதேசத்தின் முதல் வீரர்
By DIN | Published On : 18th May 2022 05:42 PM | Last Updated : 18th May 2022 07:51 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை முஸ்பிஷூர் ரஹீம் பெற்றுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் சஹூர் அஹமது மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது தான் முஸ்பிஹூர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் அசிந்தா ஃபெர்னாண்டோ வீசிய பந்தில் 2 ரன்கள் எடுத்ததன் மூலம் முஸ்பிஹூர் இந்த சாதனையைப் படைத்தார். இதன் மூலம் நீண்ட வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக அவர் உருவெடுத்துள்ளார்.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமையை தன்வசம் வைத்திருந்தார். அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 4,981 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில், இன்று முஸ்பிஹூர் அதனைத் தட்டிச் சென்றுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக அறிமுகமானவர் முஸ்பிஹூர் ரஹீம். அவர் வங்கதேச அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்.அவர் தற்போது தனது 81-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். மேலும், வங்கதேச அணிக்காக அதிக காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடி வருகிறார். அவர் ஒரு நாள் போட்டிகளில் 6,697 ரன்களும், டி20 போட்டிகளில் 1,495 ரன்களும் குவித்துள்ளார்.